Saturday, September 20, 2014

On Saturday, September 20, 2014 by farook press in ,    
போளூர் அருகே மாயமான டிராக்டர் டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக அவருடைய மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

டிராக்டர் டிரைவர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள கீழ்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 38). இவரது மனைவி சாந்தி (28). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

ஏழுமலை அதே கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவர் மகன் பரசுராமனிடம் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். பரசுராமனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

திடீர் மாயம்

இந்த நிலையில், பரசுராமனிடம் வேலை பார்த்து வந்த ஏழுமலையை கடந்த 19-7-2014 அன்று முதல் காணவில்லை. இது குறித்து அவருடைய தாய் தனம் போளூர் போலீசில் 25-7-2014 அன்று புகார் செய்தார். அதில் தனது மகனை காணவில்லை என்றும், கண்டு பிடித்து தருமாறும் கூறியிருந்தார்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். ஆனால் ஏழுமலை என்ன ஆனார்? என்பது தெரியாமல் இருந்து வந்தது.

கள்ளக்காதல் ஜோடி சரண்

இந்த நிலையில், ஏழுமலையின் பெற்றோர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து போலீசாரின் விசாரணை தீவிரமடைந்தது.

இந்த நிலையில் நேற்று காலை காணாமல்போன ஏழுமலையின் மனைவி சாந்தி, பரசுராமன் ஆகிய இருவரும் கிராமநிர்வாக அலுவலர் கண்ணகி முன்பு சரண் அடைந்தனர். அவர்கள் இருவரும் சேர்ந்து ஏழுமலையை கொலைசெய்ததாக தெரிவித்தனர். அதனால் அவர்கள் போளூர் போலீசில் ஒப்படைக் கப்பட்டனர்.

அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

இடைஞ்சலாக இருந்தார்

ஏழுமலை, பரசுராமனிடம் வேலைபார்த்ததால் ஏழுமலை வீட்டிற்கு பரசுராமன் அடிக்கடி சென்றுவந்துள்ளார். அப்போது சாந்திக்கும், பரசுராமனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இதற்கு ஏழுமலை இடைஞ்சலாக இருந்துள்ளார். இதனால் அவரை கள்ளக்காதல் ஜோடி கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளனர். அதன்படி கடந்த 19-7-2014 அன்று இரவு ஊரில் நாடகம் நடந்துள்ளது. அப்போது ஏழுமலை தனது நிலத்துக்கு சென்றுள்ளார்.

கொன்று புதைப்பு

இதை அறிந்த சாந்தியும், கள்ளக்காதலன் பரசுராமனும் அங்கு கடப்பாரையுடன் சென்று ஏழுமலையின் தலையில் கடப்பாரை கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் கொலை செய் தது தொரியாமல் இருக்க அங்கேயே குழி தோண்டி புதைத்துவிட்டு எதுவும் தெரியாதது போன்று வீடுக்கு வந்துவிட்டனர்.

தற்போது போலீஸ் விசாரணை தீவிரமடைந்ததை தொடர்ந்து பயந்து போய் இருவரும் சரண் அடைந்துள்ளனர்.

பிணம் தோண்டி எடுப்பு

அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் நேற்று மாலை தாசில்தார் கோபு, துணை சூப்பிரண்டு கணேசன், இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலையில் ஏழுமலையை புதைத்ததாக கூறப்பட்ட இடத்தில் தோண்டிப்பார்த்தனர்.

அங்கு ஏழுமலையின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அதைத்தொடர்ந்து டாக்டர்கள் ராணி, பழனி ஆகியோர் அங்கேயே ஏழுமலையின் உடலை பிரேதபரிசோதனை செய்தனர்.

மேலும் சாந்தி, பரசுராமன் ஆகிய இருவரையும் கைது செய்து போளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மனைவியே, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலைசெய்து புதைத்த இந்த சம்பவம் போளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

0 comments: