Saturday, September 20, 2014

On Saturday, September 20, 2014 by farook press in ,    
சாக்கடை, சாலை வசதிகளை செய்து தரக்கோரி சேலம் களரம்பட்டி பகுதியில் நேற்று இரவு பொதுமக்கள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாக்கடை கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.


சேலம் மாநகராட்சி 57–வது வார்டுக்குட்பட்ட களரம்பட்டி பகுதியில் 500–க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழிகள் தோண்டப்பட்டதால் சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
இந்தநிலையில், நேற்று இரவு களரம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் சிறிதுநேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாக்கடை கழிவுநீருடன், மழை தண்ணீரும் சேர்ந்து சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. ரோடு முழுவதும் சாக்கடை கழிவுநீர் சென்றதால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதியடைந்தனர்.
இதையடுத்து களரம்பட்டி ஆட்டோ நிறுத்தும் பகுதியில் ஒரு வருடத்திற்கு மேலாக பழுதடைந்த சாலையை உடனடியாக சீரமைக்கக்கோரியும், சாக்கடை வசதிகள் செய்து தரக்கோரியும் நேற்று இரவு 8.30 மணிக்கு பொதுமக்களுடன் இந்திய வாலிபர் சங்கத்தினர் சேர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சாக்கடை கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், பல ஆண்டுகளாக சாலை மற்றும் சாக்கடை வசதிகளை செய்து தராத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மறியலில் ஈடுபட்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர
இது குறித்து தகவலறிந்த கிச்சிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களையும், இந்திய வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகளையும் சமாதானப்படுத்தினர். அப்போது வார்டு கவுன்சிலரிடமும், மாநகராட்சி மேயரிடமும் எடுத்துக்கூறி சாலை மற்றும் சாக்கடை வசதிகள் செய்துதர உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தரப்பில் உறுதிபட தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இரவில் நடந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து களரம்பட்டி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் கூறுகையில், களரம்பட்டி–எருமாபாளையம் மெயின்ரோட்டில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழிகள் தோண்டப்பட்டது. அதன்பிறகு பிரதான குழாய்கள் பதிக்கப்பட்ட பிறகும் இதுவரை சாலையை சீரமைக்கவில்லை. இதனால் குண்டும், குழியுமாக காணப்படும் சாலையால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.
இந்த சாலையை சீரமைக்கவும், சாக்கடை வசதிகளை செய்து தரக்கோரியும் அ.தி.மு.க.வை சேர்ந்த வார்டு கவுன்சிலர் மல்லிகாவிடம் பலமுறை புகார் செய்தும் இதுவரை எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 57–வது வார்டில் தான் மாநகராட்சி மேயரின் வீடும் உள்ளது. மழைக்காலங்களில் சாக்கடை கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அவலநிலையை காணமுடியும். ஓட்டுபோட்ட பொதுமக்களை பற்றி மாநகராட்சி நிர்வாகம் கவலைபடுவது இல்லை. இந்த மறியல் போராட்டத்திற்கு பிறகாவது களரம்பட்டி பகுதியில் சாலை, சாக்கடை வசதிகளை செய்து தரவில்லை என்றால் அடுத்தகட்டமாக பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம், என்றனர்.

0 comments: