Showing posts with label சேலம். Show all posts
Showing posts with label சேலம். Show all posts

Tuesday, September 06, 2016

On Tuesday, September 06, 2016 by Unknown in    

தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
"யெஸ்' வங்கி என்ற பெயரில் தனியார் வங்கி ஒன்று கம்பெனி பதிவுச் சட்டத்தில் பதிவு செய்து, கடந்த 2004 முதல் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று நாடு முழுவதும் கிளைகள் அமைத்துச் செயல்பட்டு வருகிறது.
இதே பெயரில் "ஏபிஎஸ்' என்ற எழுத்துக்களை நடுவில் சேர்த்துக் கொண்டு, "யெஸ் ஏபிஎஸ் வங்கி' என்ற பெயரில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி எதிரே நேரு நகர் பேருந்து நிறுத்தம் அருகே ஒரு வங்கிக் கிளை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த "யெஸ்' வங்கியின் சேலம் கிளை மேலாளரும், துணைத் தலைவருமான ஜி.எஸ். சசிக்குமார் என்பவர் கடந்த மாதம் இங்கு வந்து வங்கிக் கிளையைப் பார்வையிட்டுள்ளார்.
அப்போது, தங்களது வங்கிப் பெயரைப் போலியாகப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்களைச் சேர்த்து வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி வசூலித்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப.கங்காதரிடம் சசிக்குமார் புகார் அளித்தார். மாவட்டக் குற்றப் பிரிவுக்கு இந்தப் புகார் மாற்றப்பட்டது. குற்றப் பிரிவின் துணைக் கண்காணிப்பாளர் பி. சந்திரசேகரன் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டு, திங்கள்கிழமை 4 பேரைக் கைது செய்தனர்.
இதுகுறித்து டிஎஸ்பி சந்திரசேகரன் அளித்த பேட்டி:
"யெஸ்' வங்கியில் "வங்கித் தொடர்பாளர்' என்ற பெயரில் முகவரைப் போன்ற பணிக்கு சோமசுந்தரம் பயிற்சி பெற்று, அதற்கான சிறிய தொகையை வைப்பு நிதியாகவும் "யெஸ்' வங்கிக்குச் செலுத்தியிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து பெயரில் சிறிய அளவிலான மாற்றங்களைச் செய்து, ஒரு போலி வங்கியை உருவாக்கியிருக்கிறார். அதற்காக எல்லா வகையான ஆவணங்களையும் அச்சிட்டு, வங்கிக் கிளைக்கான உள்கட்டமைப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். கடந்த ஒரு மாதத்துக்குள் 83 வாடிக்கையாளர்களைச் சேர்த்து ரூ. 1.60 லட்சம் வசூலித்துள்ளனர்.
ஒரு மாதத்துக்குள் மாட்டிக் கொண்டதால், பெரிய தொகை வசூலிக்க முடியவில்லை. "யெஸ்' வங்கியிலிருந்து ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, சில வாடிக்கையாளர்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பென்னாகரம் கூர்க்காம்பட்டியைச் சேர்ந்த வீ.சோமசுந்தரம் (31), பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த ஜெ.பாலாஜி (24), நாமக்கல் மாவட்டம், தடங்கானூரைச் சேர்ந்த ஜெ. சுந்தரேசன் (22), இலக்கியம்பட்டியைச் சேர்ந்த அச்சக உரிமையாளர் முருகேசன் (48) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இதே வழக்கு தொடர்பாக நாமக்கல்லைச் சேர்ந்த ஜெயபிரபுவைத் தேடி வருகிறோம். இவர்கள் மீது 120 பி, 465, 468, 471, 482, 489, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் சந்திரசேகரன்.

 

சேலம், நாமக்கல்லில் வங்கிக் கிளைகள்?

போலியான இதே வங்கிப் பெயரில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலும் இவர்கள் கிளைகளை அமைத்துள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் விசாரணையில்தான் எல்லாமும் வெளியே வரும் என காவல் துறையினர் தெரிவித்தனர். புனைவாக தயார் செய்யப்பட்ட இந்த வங்கிக்கு சோமசுந்தரம் தலைமைச் செயல் அலுவலராகவும், பாலாஜி விற்பனைப் பிரிவுப் பணியாளராகவும் இருந்துள்ளனர்.

Monday, March 23, 2015

On Monday, March 23, 2015 by Unknown in ,    


ஆத்தூரில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சார்பில் 23ம் தேதி இலவச சர்க்கரைநோய் பரிசோதனை முகாம் நடக்கிறது.
ஆத்தூர் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி கிளை சார்பில் புன்னைக்காயல் ரோட்டிலுள்ள வங்கி கிளையில் திங்கள்கிழமை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இலவச சர்க்கரைநோய் பரிசோதனை முகாம் நடக்கிறது. இம்முகாமில் உடல் எடை, உயரம், ரத்தஅழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு ஆகிய பரிசோதனைகள் இலவசமாக நடத்தப்படுகிறது. எனவே இதில் வங்கி வாடிக்கையாளர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு பயனடைய வேண்டுமென வங்கி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முகாமிற்கான ஏற்பாடுகளை ஆத்தூர் வங்கி கிளையுடன் இணைந்து ஏரல் ஜே.எல்.ஆர் ரத்த பரிசோதனை நிலையத்தினர் செய்து வருகின்றனர்

Saturday, September 20, 2014

On Saturday, September 20, 2014 by farook press in ,    
சாக்கடை, சாலை வசதிகளை செய்து தரக்கோரி சேலம் களரம்பட்டி பகுதியில் நேற்று இரவு பொதுமக்கள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாக்கடை கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.


சேலம் மாநகராட்சி 57–வது வார்டுக்குட்பட்ட களரம்பட்டி பகுதியில் 500–க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழிகள் தோண்டப்பட்டதால் சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
இந்தநிலையில், நேற்று இரவு களரம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் சிறிதுநேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாக்கடை கழிவுநீருடன், மழை தண்ணீரும் சேர்ந்து சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. ரோடு முழுவதும் சாக்கடை கழிவுநீர் சென்றதால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதியடைந்தனர்.
இதையடுத்து களரம்பட்டி ஆட்டோ நிறுத்தும் பகுதியில் ஒரு வருடத்திற்கு மேலாக பழுதடைந்த சாலையை உடனடியாக சீரமைக்கக்கோரியும், சாக்கடை வசதிகள் செய்து தரக்கோரியும் நேற்று இரவு 8.30 மணிக்கு பொதுமக்களுடன் இந்திய வாலிபர் சங்கத்தினர் சேர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சாக்கடை கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், பல ஆண்டுகளாக சாலை மற்றும் சாக்கடை வசதிகளை செய்து தராத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மறியலில் ஈடுபட்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர
இது குறித்து தகவலறிந்த கிச்சிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களையும், இந்திய வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகளையும் சமாதானப்படுத்தினர். அப்போது வார்டு கவுன்சிலரிடமும், மாநகராட்சி மேயரிடமும் எடுத்துக்கூறி சாலை மற்றும் சாக்கடை வசதிகள் செய்துதர உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தரப்பில் உறுதிபட தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இரவில் நடந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து களரம்பட்டி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் கூறுகையில், களரம்பட்டி–எருமாபாளையம் மெயின்ரோட்டில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழிகள் தோண்டப்பட்டது. அதன்பிறகு பிரதான குழாய்கள் பதிக்கப்பட்ட பிறகும் இதுவரை சாலையை சீரமைக்கவில்லை. இதனால் குண்டும், குழியுமாக காணப்படும் சாலையால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.
இந்த சாலையை சீரமைக்கவும், சாக்கடை வசதிகளை செய்து தரக்கோரியும் அ.தி.மு.க.வை சேர்ந்த வார்டு கவுன்சிலர் மல்லிகாவிடம் பலமுறை புகார் செய்தும் இதுவரை எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 57–வது வார்டில் தான் மாநகராட்சி மேயரின் வீடும் உள்ளது. மழைக்காலங்களில் சாக்கடை கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அவலநிலையை காணமுடியும். ஓட்டுபோட்ட பொதுமக்களை பற்றி மாநகராட்சி நிர்வாகம் கவலைபடுவது இல்லை. இந்த மறியல் போராட்டத்திற்கு பிறகாவது களரம்பட்டி பகுதியில் சாலை, சாக்கடை வசதிகளை செய்து தரவில்லை என்றால் அடுத்தகட்டமாக பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம், என்றனர்.
On Saturday, September 20, 2014 by farook press in ,    
வாழப்பாடி அருகே பிரபல திருடர்கள் 3 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் சிக்கினார்
வாழப்பாடி அருகே உள்ள பேளூரில் ஓட்டல் நடத்தி வருபவர் பாலமுருகன். இவர் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள ஒரு சோளக்காட்டு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சோளக்காட்டின் நடுவே சந்தேகப்படும்படியாக ஒரு வாலிபர் குடிபோதையில் படுத்திருந்தார். இதுகுறித்து அவர், உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு தகவல் கூறினார். அவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். மேலும் அவரது சட்டை பாக்கெட்டில் குறிப்பிட்ட ஒரு ஓட்டலின் கடன் அட்டை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து நடந்த விசாரணையில் அவன், விழுப்புரம் மாவட்டம் மேல்வள்ளியூர் கிராமத்தைச்சேர்ந்த பிரபல திருடன் கோவிந்தன் (வயது 24) என்பதும், அவனது கூட்டாளிகள் குமரவேல் (23), குமார் (18) ஆகிய 2 பேரும் பேளூர் பகுதியில் வசிப்பதும், 3 பேரும் சேர்ந்து அந்த பகுதியில் திருட்டில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது.
3 பேர் கைது
இதையடுத்து பொதுமக்கள் கோவிந்தனின் கூட்டாளிகளையும் அங்கு அழைத்து வந்து பொதுஇடத்தில் வைத்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கோவிந்தன் வாழப்பாடி செல்லியம்மன் கோவில் உண்டியல் உடைப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, 2 ஆண்டுகள் சிறையில் இருந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் விடுதலையாகி வந்தது தெரியவந்தது. மேலும், குமார், குமரவேல் ஆகிய 2 பேரும் பேளூர் பகுதியில் செல்போன், நகை, மோட்டார் சைக்கிள் ஆகிய திருட்டுகளில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து ஓட்டல் உரிமையாளர் பாலமுருகன் கொடுத்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரபல திருடர்களான இவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
On Saturday, September 20, 2014 by farook press in ,    
கிராமப்புற தபால் ஊழியர்கள் உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர், பென்சனருக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், வாரிசு நியமனத்தில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சேலம் பழைய பஸ்நிலையம் அருகேயுள்ள தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர்கள் ரவீந்திரன், சக்திவேல் ஆகியோர் தலைமை தாங்கினர். ஓய்வூதிய சங்கத்தின் செயலாளர் சண்முகம், நிர்வாகிகள் நேதாஜிசுபாஷ், ஜெயராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, தபால்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு துறையில் தனியார்மயம், காண்ட்ராக்ட் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், ரூ.3500 போனஸ் உச்சவரம்பை நீக்கி வாங்கும் சம்பள அடிப்படையில் போனஸ் வழங்க வேண்டும், 7–வது ஊதியக்குழு பரிந்துரைகளை 1.1.2014 முதல் அமல்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
On Saturday, September 20, 2014 by farook press in ,    
சேலம் சாரதா கல்லூரி சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. ஊற்றுநீர்போல கசிந்து அருகில் உள்ள கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது.
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
சேலம் மாநகருக்கு மேட்டூரில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. தனிக்குடிநீர் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில் கெங்கவல்லி கூட்டுகுடிநீர் மூலமும் சேலம் மாநகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்படும் குழாய்களின் ஆயுட்காலம் முடிந்து விட்டப்படியால், ஆங்காங்கே உடைவது சகஜமாகி விட்டது.
இதனால், சேலம் மாநகரில் மீண்டும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி விட்டது. வாரம் ஒருமுறை குடிநீர் சப்ளை செய்யப்பட்ட பகுதியில் தற்போது 10 நாட்கள் ஆன பின்னரே சப்ளை செய்யப்படுகிறது. இதுபோல பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்சினை உருவாகி வருகிறது.
சாரதா கல்லூரி சாலை
இந்த நிலையில் நேற்று சேலம் சாரதா கல்லூரி சாலையில் பிரதான குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணானது. குழாய்,ஆங்காங்கே உடைந்து தண்ணீர் வெளியேறுவதாக ரோட்டில் கொப்பளங்கள் ஏற்பட்டதுபோல காணப்படுகிறது. சேலம் அழகாபுரம் பஸ் நிறுத்தம் அருகே குழாயின் பல இடங்களில் இருந்து வெளியேறும் குடிநீரை சிலர், குடங்களில் பிடித்து சென்றனர்.
மேலும் குடிநீர், குழாயின் அடியில் ஊற்றுப்போல கசிந்து அருகில் உள்ள கட்டிடத்திற்குள் புகுந்தது. அழகாபுரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள நர்சிங்ஹோமிற்குள், குடிநீர் கசிந்து பெருக்கெடுத்தது. அதைத்தொடர்ந்து அங்கிருந்த ஊழியர்கள் நனைந்த பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘சேலம் மாநகராட்சியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது என்று புகார் சொன்னால் யாரும் வருவதில்லை. வந்து பார்க்கிறோம் என பதில் சொல்வதுடன் சரி. அப்புறம் வருவதில்லை. எனவே, பொதுமக்கள் நலன்கருதி, சீராக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் செயல்பட வேண்டும்‘‘ என்றனர்.
On Saturday, September 20, 2014 by farook press in ,    
தேவையில்லாத பிரச்சினையில் தலையிட்டால் தலை இருக்காது என்று சேலம் உணவு பாதுகாப்பு நியமன பெண் அதிகாரிக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் குடிநீரில் விஷம் கலந்து பொதுமக்களை கொல்லப்போவதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன பெண் அதிகாரி டாக்டர் அனுராதா. இவர், சேலம் மாவட்டத்தில் ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து கலப்படம் செய்ததை பலமுறை கண்டறிந்துள்ளார். கிழங்கு மாவில் மக்காச்சோள மாவு கலந்து ஜவ்வரிசி உற்பத்தி செய்த 5–க்கும் மேற்பட்ட ஆலைகளை பூட்டி ‘சீல்‘ வைத்தவர்.
இதுபோன்ற செயலுக்காக ஒருமுறை இடமாற்றம் செய்யப்பட்டார். மீண்டும் தடை உத்தரவு பெற்று அதே இடத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்தது. அதை சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த முகமதுரபீக் என்பவர் எழுதியாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
கடிதத்தின் தொடக்கத்தில், பிறை நிலா படம் வரைந்து 786 என்ற எண் எழுதப்பட்டிருந்தது. கடிதத்தில் தொடர்ந்து கூறப்பட்டு இருப்பதாவது:–

 கொண்டப்பநாயக்கன்பட்டி ஜீவா நகர் 4 வார்டில் சுமார் 19 நாய்களுக்கு விஷம் வைத்து கொன்று உள்ளோம். அதேபோல் 4–வது வார்டு மக்களையும் குடிநீரில் விஷம் கலந்து அனைவரையும் கொல்லுவோம். இவர்கள் எங்கள் தொழிலுக்கு போட்டியாக உள்ளனர். அனுராதா...,உன்னால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். நம்பிக்கை இல்லை என்றால், ஜீவா நகருக்கு நீங்கள் வந்தால் தெரியும் இந்த முகமதுரபீக் பற்றி. கண்டிப்பாக இவர்கள் பயன்படுத்தும் குடிநீர் டேங்கில் வரும் வாரம் விஷம் கலக்கப்படும். உன்னால் முடிந்தால் தடுத்துப்பார். எங்களுக்கு எதிராக யார் இருந்தாலும் அவர்களை உயிருடன் விட மாட்டோம். கண்டிப்பாக ஜீவா நகரில் ஒரு வாரத்தில் பெரிய விபரீதம் நடக்கும். கரட்டில் ஆயுத பயிற்சிக்கு இரவு நேரங்களில் வந்தால் நாய்களில் தொல்லை தாங்க முடியவில்லை. அதனால், 19 நாய்களையும் முடித்து விட்டோம். தேவையில்லாமல் பிரச்சினையில் தலையிட்டால் உன்தலை இருக்காது. நீங்கள் தான் முடிவுசெய்ய வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்த
 தனக்கு வந்த கடிதத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா மாவட்ட கலெக்டர் மகரபூஷணத்திற்கு அனுப்பினார். அவர் உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கவும், கொண்டப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் பாபுக்கும், வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் தெரிவிக்க உத்தரவிட்டார். மேலும் கிராம நிர்வாக அலுவலர் பாலம்மாளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகியவற்றிலும் டாக்டர் அனுராதா புகார் செய்தார்.

 கடிதம் தொடர்பாக கொடண்டப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் பாபு கூறுகையில்,‘‘மிரட்டல் கடிதம் தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது. மேலும் டேங்க் ஆப்பரேட்டர்கள் விழிப்புடன் இருக்க உஷார் படுத்தப்பட்டுள்ளனர். 4 வார்டில் உள்ள மேல்நிலை நீர்தக்க தொட்டி உள்ள தண்ணீர் ஆய்வு செய்த பின்னரே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கடித்ததில் குறிப்பிட்டபடி 19 நாய்கள் இறந்துள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்‘‘ என்றார்.

அதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள குடிநீர் டேங்க்கை ஆபரேட்டர்களும், வார்டு உறுப்பினர்களும் கண்காணித்து வருகிறார்கள். கடிதத்தை எழுதியவர் யார்? என்றும், அயன்கரட்டுப்பகுதியில் ஆயுதப்பயிற்சி ஏதேனும் நடந்து வந்ததா? என்றும் கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா எடுத்து வரும் நடவடிக்கையால், அவர் மீது ஏற்பட்ட விரோதம் காரணமாக யாராவது இதுபோன்ற கடிதத்தை எழுதி இருக்கலாமா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
சீரகாப்பாடி அருகே தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் தாங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார்கள். இந்த மாணவர்கள் விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளை வைத்துள்ளனர். இதனை ஒரிரு மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது தொடர்பாக ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் வழக்குப்பதிவு செய்து சேலம் நெத்திமேடு பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 23), அதே பகுதியை சேர்ந்த ஜான்பாட்ஷா (22) ஆகியோரை கடந்த வாரம் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சேலம் தாதகாப்பட்டி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த சேகர் மகன் பிரசாந்த் (வயது 16) மற்றும் காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த சந்தோஷ் மகன் ஆனந்த் (19) ஆகிய மேலும் 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 3 விலையுயர்ந்த ஆடம்பர மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
பெரியாரின் 136-வது பிறந்தநாளையொட்டி சேலத்தில் உள்ள அவரது சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அ.தி.மு.க.-தி.மு.க.

தந்தை பெரியாரின் 136-வது பிறந்தநாள் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அவருடைய சிலைக்கு நேற்று பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அ.தி.மு.க. சார்பில் பன்னீர்செல்வம் எம்.பி., மேயர் சவுண்டப்பன், துணை மேயர் நடேசன், எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், ஜி.வெங்கடாசலம், உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.தி.மு.க. சார்பில் மாவட்ட அவைத்தலைவர் சூடாமணி தலைமையில், மாநகர செயலாளர் கலையமுதன், மாநகர துணை செயலாளர்கள் குணசேகரன், முரளி முன்னாள் மேயர் ரேகாபிரியதர்ஷினி உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

கம்யூனிஸ்டு கட்சி- பா.ம.க.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கட்சியின் மாநில தலைவர் தா.பாண்டியன் சேலத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், மாநகர செயலாளர் ராஜேந்திரன், மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். ம.தி.மு.க. சார்பில் மாநகர பொறுப்பாளர் ஆனந்தராஜ் தலைமையில், லிவ்யசந்திரசேகர், தைரியசீலன்,மகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பா.ம.க. சார்பில் மாநில துணைபொதுச்செயலாளர் அருள் தலைமையில், மாநகர் மாவட்ட செயலாளர் ராசரத்தினம், மாநில துணை செயலாளர் சத்ரியசேகர், மாநகர் மாவட்ட தலைவர் அன்புகரசு, மாநில நிர்வாகி முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். திராவிடர் கழகத்தின் சார்பில், மாவட்ட தலைவர் பழனிபுள்ளையண்ணன் தலைமையில், மண்டலதலைவர் சுப்பிரமணியன், மாவட்ட நிர்வாகிகள் ஜவகர், சிவக்குமார் உள்பட திரளானோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பல்வேறு அமைப்புகள்

பகுஜன்சமாஜ் கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் பார்த்திபன் தலைமையில், மாவட்ட பொதுசெயலாளர் காஜாமைதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில், மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையிலும், எம்.ஜி.ஆர்.கழகம் சார்பில், மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையிலும் கட்சி நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். அம்பேத்கார் மக்கள் கட்சி சார்பில் அதன் நிறுவன தலைவர் தங்கம் அம்பேத்கார் மற்றும் நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

அகில உலக தர்மசாஸ்தா ஐயப்பா மிஷன் சார்பில். அதன் நிறுவனர் ராஜமங்கலம் மற்றும் சக்தி ஆகியோர் மாதுளம் பழங்களால் ஆன மாலையை பெரியார் சிலைக்கு அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதுதவிர பெரியார் திராவிடர் கழகம் உள்பட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் திரளானோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தமிழ்சங்கம்

சேலம் தமிழ்சங்கத்தின் சார்பில், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சங்க தலைவர் மாணிக்கம், துணை தலைவர் ராஜ்மோகன், செயலாளர் குமரவேலு, துணை செயலாளர் சங்கரன் பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
சேலம் அருகே ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவி சில்மிஷம் செய்யப்பட்டது தொடர்பாக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
கல்லூரி மாணவி
கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் கீர்த்திகா(வயது 22, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பெங்களூரில் உள்ள கல்லூரியில் பி.பி.எம். படித்து வருகிறார். கீர்த்திகா கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் கேரள மாநிலத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.
அங்கு அவர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நேற்று குடும்பத்தினருடன் மீண்டும் பெங்களூர் திரும்பினார். கீர்த்திகா மற்றும் அவரது குடும்பத்தினர் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூர் செல்லும் கொச்சிவேளி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.

அதே பெட்டியில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ் மகன் அஜித்(வயது 26) என்பவர் பயணம் செய்தார். இவர் ராணுவத்தில் சமையல்காரராக திரிபுரா மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். அந்த ரெயில் சேலம் அருகே வந்த போது, அஜித் பக்கத்து சீட்டில் இருந்த மாணவி கீர்த்திகாவிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி அவர் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதையடுத்து அந்த ரெயில் சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் வந்ததும் கீர்த்திகா இதுதொடர்பாக சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் விசாரணை நடத்தினார். இதையடுத்து மாணவியை சில்மிஷம் செய்ததாக அஜித்தை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கைதான ராணுவ வீரருக்கு கடந்த 8–ந் தேதி தான் திருமணம் நடந்தது. ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக புதுமாப்பிள்ளையான ராணுவ வீரர் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Wednesday, September 10, 2014

On Wednesday, September 10, 2014 by farook press in ,    
தலைவாசல் அரசு மாணவர் விடுதியில் திருட்டு போன பணத்தை கண்டுபிடிக்க 12 மாணவர்கள் தங்களது கையில் கற்பூரம் ஏற்றியதால் தீக்காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் தரப்பில் கூறப்பட்ட புகாரை தொடர்ந்து அரசு எம்.எல்.ஏ., அதிகாரிகள் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் ஊராட்சி மும்முடியில் ஆதி திராவிடர் மாணவர் விடுதி உள்ளது. இங்கு 6 முதல் 12–ம் வகுப்பு வரை சுமார் 65 மாணவர்கள் தங்கியிருந்து படித்து வருகின்றனர். இந்த விடுதியில் மொத்தம் 7 அறைகள் உள்ளன. ஒரு அறையில் 7–ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஜெயபிரகாசின் 110 ரூபாய் அவனது பெட்டியில் இருந்து திடீரென திருட்டு போனதாக தெரிகிறது. பணம் காணாமல் போனது பற்றி தன்னுடன் அறையில் தங்கியிருந்த சக மாணவர்களிடம் ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளான். அதன்பிறகு தன்னுடன் தங்கியிருந்த 12 மாணவர்களையும் கற்பூரத்தை கையில் ஏற்றி சத்தியம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளதாக தெரிகிறது.
அதன்படி முதலில் என்னுடைய பணத்தை நான் எடுக்கவில்லை என்று மாணவர் ஜெயபிரகாஷ் தனது கையில் கற்பூரத்தை ஏற்றி சத்தியம் செய்துள்ளான். இதையடுத்து அறையில் உடன் தங்கியிருந்த மாணவர்கள் தனசேகர், ராம்கி, கண்ணன், கார்த்தி, பிரகாஷ், ராமமூர்த்தி, பிரபு, கலையரசன் உள்பட 12 மாணவர்களும் அடுத்தடுத்து தங்களது கையில் கற்பூரத்தை ஏற்றி பணத்தை நாங்கள் எடுக்கவில்லை என்று சத்தியம் செய்தனர். இதனால் கையில் கற்பூரம் ஏற்றிய 12 மாணவர்களின் கையிலும் தீக்காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தங்களது பெற்றோர்களுக்கு மாணவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், அரசு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கெங்கவல்லி தொகுதி எம்.எல்.ஏ., சுபா, ஆத்தூர் உதவி கலெக்டர் ஜெய்ராம், தாசில்தார் தேன்மொழி, கிராம நிர்வாக அலுவலர் சாந்தி ஆகியோர் நேற்று சம்பந்தப்பட்ட அரசு மாணவர் விடுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு மாணவர்களின் குறைகளை கேட்டறிந்தனர்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரி பூவேந்திரன் (பொறுப்பு) தலைமையில் அதிகாரிகளும் தலைவாசல் அரசு விடுதிக்கு சென்று விடுதி காப்பாளர் தங்கமாரியப்பன், சமையலர்கள் செல்வராஜ், அம்பாயிரம், துப்புரவு பணியாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் 12 பேரையும் அதிகாரிகள் உடனடியாக சிகிச்சைக்காக தலைவாசல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரி பூவேந்திரன் கூறுகையில், விடுதியில் உள்ள ஒரு அறையில் பணம் திருட்டு போயுள்ளது. இதனால் பணத்தை எடுத்தது யார்? என்று மாணவர்களிடையே கண்டுபிடிக்க கையில் கற்பூரத்தை ஏற்றி சத்தியம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கையில் கற்பூரம் ஏற்றி தீக்காயம் அடைந்த மாணவர்களிடமும், அவர்களது பெற்றோர்களிடமும் நேரில் விசாரணை நடத்தினோம். இது தொடர்பான அறிக்கை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
இது ஒருபுறம் இருக்க, விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனவும், அடிக்கடி பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட விஷபூச்சிகள் நுழைந்து விடுவதாகவும் அதிகாரிகளிடம் விடுதி மாணவர்கள் தெரிவித்தனர். அதேபோல், விளையாட்டு பொருட்கள், தேவையான பிளாஸ்டிக் வாலி ஆகியவை இல்லை எனவும் மாணவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தனது சொந்த செலவில் பொருட்கள் வாங்கி தருவதாக சுபா எம்.எல்.ஏ., மாணவர்களிடம் தெரிவித்தார்.

Saturday, September 06, 2014

On Saturday, September 06, 2014 by farook press in ,    
சேலம் புதிய கலெக்டர் அலுவலகம் அருகில் நிர்வாணக் கோலத்தில் தட்டு தடுமாறியபடி வந்த முதியவரை அவ்வழியாக சென்றவர்கள் காட்சி பொருளாக கண்டார்களே தவிர,
அவரது மானத்தை மறைக்க யாரும் உதவிட முன்வராதது மனித நேயம் முற்றிலுமாக மரித்துப்போய் கிடக்கிறது என்ற வேதனையான உண்மையை உணர்த்தியது.
வாகனங்களின் இரைச்சலுக்கு மத்தியில் சேலம் மாநகரம் மூழ்கி கிடக்கிறது. வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களைச் சேர்ந்தோரும் இங்கு ஏராளமானோர் உள்ளனர்.
மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தவறுகளும், குற்றங்களும் அதிகப்படியாக உள்ளது. வாழ வழியின்றி தவிக்கும் கூட்டம் சாலையோர பிளாட்பார்ம்களில் வெயில், மழை பாராமல் கிடக்கின்றனர்.
மனநலம் பாதிக்கப்பட்டோர் அழுக்கு மூட்டைகளுடன் சுமைதாங்கிகளாக வீதியில் சுற்றிதிரிகின்றனர்.
அது ஒரு புறமிருக்க, உறவுகளால் ஒதுக்கப்பட்டவர்கள் பசி கொடுமையால் ஆடையின்றி குழந்தை மேனியாக வலம் வரும் நிகழ்வுகளும் சேலம் மாநகரத்தில் அதிகரித்துள்ளது.
வசதி வாய்ப்பை பெருக்கிக் கொள்ள தன்னார்வ அமைப்புகளை உருவாக்கும் நபர்கள், இல்லாதோர், இயலாதோருக்கு உதவ முன்வருவதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
சேலம் திருவள்ளுவர் சிலை அருகில் நேற்று மாலை கொட்டும் மழையில் உடலில் ஆடையின்றி முதியவர் ஒருவர் தட்டு தடுமாறியபடி புதிய கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தார்.
வாகனங்களில் சென்றோர் அவரை வேடிக்கை பார்த்தபடி சென்றனரே தவிர, முதியவரின் மானத்தை மறைக்க யாரும் முன்வரவில்லை.
இந்நிலையில், அவ்வழியாக வந்த ஆட்டோ டிரைவர் நல்லாச்சி, தனியார் மொபைல் நிறுவன ஊழியர் சேதுராமன் இருவரும் முதியவருக்கு உதவ முன் வந்தனர்.
ஆட்டோ டிரைவர் தன்னிடம் இருந்த துண்டை எடுத்து அவருடைய இடுப்பில் கட்டி விட்டு மானத்தை மறைத்தார்.
மொபைல் நிறுவன ஊழியர் அருகில் இருந்த ஜவுளி கடையில் அண்ட்ராயரை வாங்கி வந்து அணிவித்து விட்டார். என்ன நடக்கிறது என்று தெரியாத நிலையில் முதியவர் சோர்ந்து கிடந்தார்.
அவர் பெயர், ஊர் விபரம் கேட்டபோது சொல்ல முடியாமல் தவித்தார்.
உறவுகளால் ஒதுக்கப்பட்டு நடுரோட்டுக்கு அடித்து விரட்டப்பட்டு
இருக்கலாம் என தெரிகிறது.
தன் குடும்பம், தன் மக்கள் என்று ஓடுவோர்
எண்ணிக்கைதான் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
ஒரு சிலர் மட்டுமே உதவும் மனப்பான்மையுடன்
வாழ்ந்து வருகின்றனர்.

Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    
சேலம் சீலநாயக்கன் பட்டி பைபாஸ் பகுதியில் எஸ்.கே.கார்ஸ் என்ற தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு கார்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார்கள்.
இந்த நிறுவனத்தை தொழில் அதிபர் எஸ்.கிருஷ்ணமூர்த்தியும், அவரது மகன் எஸ்.கே. முருகானந்தமும் நடத்தி வருகிறார்கள். பைபாஸ் ரோடு முன்பகுதியில் கார் ஷோரூமும், பின் பகுதியில் கார் ஒர்க்ஷாப்பும் உள்ளது.
இங்கு காவலாளியாக பெரியசாமி (58), சின்னத்தம்பி, அர்த்தநாரி ஆகிய 3 பேர் பணியாற்றினர்.
நேற்று இரவு அர்த்தநாரி விடுமுறை என்பதால் வேலைக்கு வரவில்லை. மற்ற இரண்டு காவலாளிகளும் வந்து இருந்தனர். காவலாளி பெரியசாமி ஒர்க்ஷாப்பில் பணியில் இருந்தார். சின்னத் தம்பி ஷோரூம் முன்புறம் பணியில் இருந்தார். இன்று அதிகாலை 3 மணிக்கு ஒர்க்ஷாப்புக்கு சென்ற சின்னத்தம்பி பெரியசாமியிடம் பேசி விட்டு ஷோரூம் முன்புறம் சென்று விட்டார்.
இன்று அதிகாலை 4–30 மணிக்கு மீண்டும் ஒர்க் ஷாப்பிற்கு போய் பார்த்த போது சின்னதம்பிக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. ரத்த வெள்ளத்தில் பெரியசாமி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே இரும்பு ராடு, கத்தி, கார்களில் முன்புறம் வைக்கப்படும் ராடு ஆகியவை கிடந்தது. ஒர்க்ஷாப் முழுவதும் ரத்தக்கறை படிந்து இருந்தது.
இதுகுறித்து அவர் கார் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து பார்த்து விட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
துணை கமிஷனர் பிரபாகரன், உதவி கமிஷனர்கள் தினகரன், பழனிச்சாமி, ராஜேந்திரன், அசோகன், இன்ஸ்பெக்டர்கள் சந்தோஷ் குமார் (அன்னதானப்பட்டி), பாரதி மோகன் (செவ்வாய்ப் பேட்டை), ரஜினிகாந்த் (நுண்ணறிவுப்பிரிவு) மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து ஓடி சீலநாயக்கன்பட்டி பஸ் ஸ்டாப் அருகே போய் நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.
கார் உரிமையாளர் எஸ்.கே. கிருஷ்ணமூர்த்தி ஒர்க்ஷாப்பில் உள்ள அலுவலகத்தில் பணத்தை சரி பார்த்தார். அப்போது ரூ. 9 லட்சம் கொள்ளை போய் இருந்தது தெரியவந்தது. இன்னொரு இடத்தில் டிராயரில் வைக்கப்பட்டு இருந்த ரூ.6 லட்சம் தப்பியது.
கொள்ளையர்கள் பணம் இருப்பது தெரிந்தே இங்கு வந்து காவலாளியை கொன்று விட்டு பணத்தை கொள்ளையடித்து சென்று உள்ளனர். ஒர்க்ஷாப்பில் உள்ள சாவி காவலாளி வசம் இருந்து உள்ளது. இதை தெரிந்து கொண்ட கொள்ளைக் கும்பல் ஒர்க்ஷாப்பிற்குள் புகுந்து உள்ளது.
அவர்களை காவலாளி பெரியசாமி தடுத்து இருக்கிறார். இதனால் கத்தியால் குத்திய அந்தக்கும்பல் இரும்பு ராடால் அவரை தாக்கி இருக்கிறது.
ஆத்திரம் தணியாமல் காரின் முன்புறம் வைத்து இருக்கும் பைபர் கம்பியையும் எடுத்து ஓட ஓடவிரட்டி தாக்கி இருக்கிறார்கள். கொள்ளைக் கும்பலிடம் இருந்து உயிரை காப்பாற்ற அவர் தப்பி ஓடி இருக்கிறார். சுவர் ஏறி தப்பிக்க முயற்சித்தும் அவரை கொள்ளைக்கும்பல் விடவில்லை .அவரை ஓட, ஓட துரத்தி கொள்ளைக் கும்பல் கொன்று உள்ளது. இதில் சுவர் மற்றும் ஒர்க்ஷாப் முழுவதும் ரத்தக்கறை படிந்து உள்ளது.
இன்று அதிகாலை 3 மணி முதல் 4–30 மணிக்குள் இந்தக் கொலையும், கொள்ளையும் நடந்து உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த அலுவலகத்தையும், கார் ஷோரூமையும் கொள்ளைக் கும்பல் நோட்டமிட்டு இந்தக் கொலை–கொள்ளையை அரங்கேற்றி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். மோப்ப நாய் சீலநாயக்கன்பட்டி பை–பாஸ் பஸ் ஸ்டாப்பில் போய் நின்றதால் கொள்ளையர்கள் பஸ் அல்லது ஏதாவது வாகனத்தில் தப்பி சென்று இருக்க வாய்ப்பு உள்ளது.
சேலத்தில் 24 மணி நேரமும் வாகன நடமாட்டம் உள்ள இடத்தில் கொலை–கொள்ளை நடந்து இருப்பது சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலை செய்யப்பட்ட காவலாளி பெரியசாமி சேலம் தாதகாப்பட்டி பெருமாள் கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர். இவருக்கு 58 வயது ஆகிறது. இவர் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த உறவினர்கள் விரைந்து வந்து அவரது உடலைப் பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.