Saturday, September 20, 2014

On Saturday, September 20, 2014 by farook press in ,    
சேலம் சாரதா கல்லூரி சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. ஊற்றுநீர்போல கசிந்து அருகில் உள்ள கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது.
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
சேலம் மாநகருக்கு மேட்டூரில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. தனிக்குடிநீர் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில் கெங்கவல்லி கூட்டுகுடிநீர் மூலமும் சேலம் மாநகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்படும் குழாய்களின் ஆயுட்காலம் முடிந்து விட்டப்படியால், ஆங்காங்கே உடைவது சகஜமாகி விட்டது.
இதனால், சேலம் மாநகரில் மீண்டும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி விட்டது. வாரம் ஒருமுறை குடிநீர் சப்ளை செய்யப்பட்ட பகுதியில் தற்போது 10 நாட்கள் ஆன பின்னரே சப்ளை செய்யப்படுகிறது. இதுபோல பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்சினை உருவாகி வருகிறது.
சாரதா கல்லூரி சாலை
இந்த நிலையில் நேற்று சேலம் சாரதா கல்லூரி சாலையில் பிரதான குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணானது. குழாய்,ஆங்காங்கே உடைந்து தண்ணீர் வெளியேறுவதாக ரோட்டில் கொப்பளங்கள் ஏற்பட்டதுபோல காணப்படுகிறது. சேலம் அழகாபுரம் பஸ் நிறுத்தம் அருகே குழாயின் பல இடங்களில் இருந்து வெளியேறும் குடிநீரை சிலர், குடங்களில் பிடித்து சென்றனர்.
மேலும் குடிநீர், குழாயின் அடியில் ஊற்றுப்போல கசிந்து அருகில் உள்ள கட்டிடத்திற்குள் புகுந்தது. அழகாபுரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள நர்சிங்ஹோமிற்குள், குடிநீர் கசிந்து பெருக்கெடுத்தது. அதைத்தொடர்ந்து அங்கிருந்த ஊழியர்கள் நனைந்த பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘சேலம் மாநகராட்சியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது என்று புகார் சொன்னால் யாரும் வருவதில்லை. வந்து பார்க்கிறோம் என பதில் சொல்வதுடன் சரி. அப்புறம் வருவதில்லை. எனவே, பொதுமக்கள் நலன்கருதி, சீராக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் செயல்பட வேண்டும்‘‘ என்றனர்.

0 comments: