Saturday, September 20, 2014

On Saturday, September 20, 2014 by farook press in ,    
தேவையில்லாத பிரச்சினையில் தலையிட்டால் தலை இருக்காது என்று சேலம் உணவு பாதுகாப்பு நியமன பெண் அதிகாரிக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் குடிநீரில் விஷம் கலந்து பொதுமக்களை கொல்லப்போவதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன பெண் அதிகாரி டாக்டர் அனுராதா. இவர், சேலம் மாவட்டத்தில் ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து கலப்படம் செய்ததை பலமுறை கண்டறிந்துள்ளார். கிழங்கு மாவில் மக்காச்சோள மாவு கலந்து ஜவ்வரிசி உற்பத்தி செய்த 5–க்கும் மேற்பட்ட ஆலைகளை பூட்டி ‘சீல்‘ வைத்தவர்.
இதுபோன்ற செயலுக்காக ஒருமுறை இடமாற்றம் செய்யப்பட்டார். மீண்டும் தடை உத்தரவு பெற்று அதே இடத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்தது. அதை சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த முகமதுரபீக் என்பவர் எழுதியாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
கடிதத்தின் தொடக்கத்தில், பிறை நிலா படம் வரைந்து 786 என்ற எண் எழுதப்பட்டிருந்தது. கடிதத்தில் தொடர்ந்து கூறப்பட்டு இருப்பதாவது:–

 கொண்டப்பநாயக்கன்பட்டி ஜீவா நகர் 4 வார்டில் சுமார் 19 நாய்களுக்கு விஷம் வைத்து கொன்று உள்ளோம். அதேபோல் 4–வது வார்டு மக்களையும் குடிநீரில் விஷம் கலந்து அனைவரையும் கொல்லுவோம். இவர்கள் எங்கள் தொழிலுக்கு போட்டியாக உள்ளனர். அனுராதா...,உன்னால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். நம்பிக்கை இல்லை என்றால், ஜீவா நகருக்கு நீங்கள் வந்தால் தெரியும் இந்த முகமதுரபீக் பற்றி. கண்டிப்பாக இவர்கள் பயன்படுத்தும் குடிநீர் டேங்கில் வரும் வாரம் விஷம் கலக்கப்படும். உன்னால் முடிந்தால் தடுத்துப்பார். எங்களுக்கு எதிராக யார் இருந்தாலும் அவர்களை உயிருடன் விட மாட்டோம். கண்டிப்பாக ஜீவா நகரில் ஒரு வாரத்தில் பெரிய விபரீதம் நடக்கும். கரட்டில் ஆயுத பயிற்சிக்கு இரவு நேரங்களில் வந்தால் நாய்களில் தொல்லை தாங்க முடியவில்லை. அதனால், 19 நாய்களையும் முடித்து விட்டோம். தேவையில்லாமல் பிரச்சினையில் தலையிட்டால் உன்தலை இருக்காது. நீங்கள் தான் முடிவுசெய்ய வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்த
 தனக்கு வந்த கடிதத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா மாவட்ட கலெக்டர் மகரபூஷணத்திற்கு அனுப்பினார். அவர் உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கவும், கொண்டப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் பாபுக்கும், வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் தெரிவிக்க உத்தரவிட்டார். மேலும் கிராம நிர்வாக அலுவலர் பாலம்மாளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகியவற்றிலும் டாக்டர் அனுராதா புகார் செய்தார்.

 கடிதம் தொடர்பாக கொடண்டப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் பாபு கூறுகையில்,‘‘மிரட்டல் கடிதம் தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது. மேலும் டேங்க் ஆப்பரேட்டர்கள் விழிப்புடன் இருக்க உஷார் படுத்தப்பட்டுள்ளனர். 4 வார்டில் உள்ள மேல்நிலை நீர்தக்க தொட்டி உள்ள தண்ணீர் ஆய்வு செய்த பின்னரே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கடித்ததில் குறிப்பிட்டபடி 19 நாய்கள் இறந்துள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்‘‘ என்றார்.

அதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள குடிநீர் டேங்க்கை ஆபரேட்டர்களும், வார்டு உறுப்பினர்களும் கண்காணித்து வருகிறார்கள். கடிதத்தை எழுதியவர் யார்? என்றும், அயன்கரட்டுப்பகுதியில் ஆயுதப்பயிற்சி ஏதேனும் நடந்து வந்ததா? என்றும் கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா எடுத்து வரும் நடவடிக்கையால், அவர் மீது ஏற்பட்ட விரோதம் காரணமாக யாராவது இதுபோன்ற கடிதத்தை எழுதி இருக்கலாமா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

0 comments: