Wednesday, September 10, 2014

On Wednesday, September 10, 2014 by farook press in ,    
தலைவாசல் அரசு மாணவர் விடுதியில் திருட்டு போன பணத்தை கண்டுபிடிக்க 12 மாணவர்கள் தங்களது கையில் கற்பூரம் ஏற்றியதால் தீக்காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் தரப்பில் கூறப்பட்ட புகாரை தொடர்ந்து அரசு எம்.எல்.ஏ., அதிகாரிகள் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் ஊராட்சி மும்முடியில் ஆதி திராவிடர் மாணவர் விடுதி உள்ளது. இங்கு 6 முதல் 12–ம் வகுப்பு வரை சுமார் 65 மாணவர்கள் தங்கியிருந்து படித்து வருகின்றனர். இந்த விடுதியில் மொத்தம் 7 அறைகள் உள்ளன. ஒரு அறையில் 7–ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஜெயபிரகாசின் 110 ரூபாய் அவனது பெட்டியில் இருந்து திடீரென திருட்டு போனதாக தெரிகிறது. பணம் காணாமல் போனது பற்றி தன்னுடன் அறையில் தங்கியிருந்த சக மாணவர்களிடம் ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளான். அதன்பிறகு தன்னுடன் தங்கியிருந்த 12 மாணவர்களையும் கற்பூரத்தை கையில் ஏற்றி சத்தியம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளதாக தெரிகிறது.
அதன்படி முதலில் என்னுடைய பணத்தை நான் எடுக்கவில்லை என்று மாணவர் ஜெயபிரகாஷ் தனது கையில் கற்பூரத்தை ஏற்றி சத்தியம் செய்துள்ளான். இதையடுத்து அறையில் உடன் தங்கியிருந்த மாணவர்கள் தனசேகர், ராம்கி, கண்ணன், கார்த்தி, பிரகாஷ், ராமமூர்த்தி, பிரபு, கலையரசன் உள்பட 12 மாணவர்களும் அடுத்தடுத்து தங்களது கையில் கற்பூரத்தை ஏற்றி பணத்தை நாங்கள் எடுக்கவில்லை என்று சத்தியம் செய்தனர். இதனால் கையில் கற்பூரம் ஏற்றிய 12 மாணவர்களின் கையிலும் தீக்காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தங்களது பெற்றோர்களுக்கு மாணவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், அரசு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கெங்கவல்லி தொகுதி எம்.எல்.ஏ., சுபா, ஆத்தூர் உதவி கலெக்டர் ஜெய்ராம், தாசில்தார் தேன்மொழி, கிராம நிர்வாக அலுவலர் சாந்தி ஆகியோர் நேற்று சம்பந்தப்பட்ட அரசு மாணவர் விடுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு மாணவர்களின் குறைகளை கேட்டறிந்தனர்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரி பூவேந்திரன் (பொறுப்பு) தலைமையில் அதிகாரிகளும் தலைவாசல் அரசு விடுதிக்கு சென்று விடுதி காப்பாளர் தங்கமாரியப்பன், சமையலர்கள் செல்வராஜ், அம்பாயிரம், துப்புரவு பணியாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் 12 பேரையும் அதிகாரிகள் உடனடியாக சிகிச்சைக்காக தலைவாசல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரி பூவேந்திரன் கூறுகையில், விடுதியில் உள்ள ஒரு அறையில் பணம் திருட்டு போயுள்ளது. இதனால் பணத்தை எடுத்தது யார்? என்று மாணவர்களிடையே கண்டுபிடிக்க கையில் கற்பூரத்தை ஏற்றி சத்தியம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கையில் கற்பூரம் ஏற்றி தீக்காயம் அடைந்த மாணவர்களிடமும், அவர்களது பெற்றோர்களிடமும் நேரில் விசாரணை நடத்தினோம். இது தொடர்பான அறிக்கை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
இது ஒருபுறம் இருக்க, விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனவும், அடிக்கடி பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட விஷபூச்சிகள் நுழைந்து விடுவதாகவும் அதிகாரிகளிடம் விடுதி மாணவர்கள் தெரிவித்தனர். அதேபோல், விளையாட்டு பொருட்கள், தேவையான பிளாஸ்டிக் வாலி ஆகியவை இல்லை எனவும் மாணவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தனது சொந்த செலவில் பொருட்கள் வாங்கி தருவதாக சுபா எம்.எல்.ஏ., மாணவர்களிடம் தெரிவித்தார்.

0 comments: