Wednesday, September 10, 2014

On Wednesday, September 10, 2014 by farook press in ,    
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு, தமிழக அரசின் சார்பில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, ரூ.5 கோடி நிதி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், மிகப்பெரிய பொருட்சேதமும், ஏராளமான உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை ராணுவம் மீட்டுள்ளது. வரலாறு காணாத பேரழிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பிலும், தமிழக மக்களின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
வெள்ளத்தில் சிதைந்து போன பகுதிகளில் உடனடியாக மீட்பு, நிவாரணம் மற்றும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் மிகப்பெரிய சவாலை ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. மிகுந்த துயரத்தில் ஆழ்ந்திருக்கும் ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களுக்கு தமிழக அரசும், தமிழக மக்களும் ஆதரவாக இருப்பார்கள்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ரூ.5 கோடி நிதியுதவி வழங்க ஆணையிட்டுள்ளதுடன், ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

0 comments: