Wednesday, September 10, 2014

On Wednesday, September 10, 2014 by Unknown in ,    
கோவை, : கோவையில் காரில் சென்ற இளம்பெண்ணிடம் 18 பவுன் நகை பறித்த கும்பல், கத்தியைக் காட்டி மிரட்டி தப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை அவிநாசி ரோடு பீளமேட்டில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்றிரவு திருமண விழா நடந்தது. இதில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்த, தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் தீபக் (30), அவர் மனைவி ஜமுனா தேவி (25) மற்றும் உறவினர்கள் காரில் சென்றனர். விழா முடிந்து இரவு 9 மணிக்கு, தீபக், ஜமுனா தேவி, அவர்களது உறவினர்கள் ரேஸ்கோர்சுக்கு காரில் புறப்பட்டனர்.
அப்போது திருமண மண்டபம் முன் நின்ற வாலிபர், கையில் ஒரு பேப்பரை ஜமுனா தேவியிடம் காட்டி முகவரி கேட்டார். ஜமுனா தேவி பேப்பரை வாங்கி பார்த்த போது, அந்த நபர் அவரின் கழுத்தில் இருந்த 18 பவுன் தங்க நெக்லஸ், ஆரத்தை கொத்தாக பறித்தார். உறவினர்கள், நகையை மீட்க முயன்றபோது அந்த வாலிபர் தப்பி ரோட்டிற்கு மறு புறம் ஓடினார். இந்நிலையில் தீபக், ‘‘திருடன் தப்பி ஓடுறான், விடாதீங்க, ’ என கூச்சலிட்டார். தீபக் அந்த வாலிபரை பிடிக்க முயன்றபோது, அவர் ரோட்டோரத்தில் நின்ற தனது கூட்டாளியுடன் பைக்கில் ஏறினார். அக்கம் பக்கத்தினர், நகை பறித்த வாலிபர் மற்றும் அவரது கூட்டாளியை மடக்க முயன்றனர். தீபக் பைக்கை இழுத்து பிடித்தார். இந்நிலையில், பைக்கில் இருந்த நகை திருடர்கள், தங்களது பாக்கெட்டில் இருந்த கத்தியை எடுத்து தீபக் மற்றும் பொதுமக்களை மிரட்டினர். ‘‘யாராவது பக்கத்தில் வந்தால் குத்தி கொன்று விடுவோம், பைக்கில் நாங்கள் போகும் வரை யாரும் பின்னால் வரக்கூடாது, மீறினால் விபரீதம் ஏற்படும், ’’என எச்சரித்தனர்.
அவ்வழியாக சென்றவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தியதால், நகை திருடர்களால் பைக்கில் தப்ப முடியவில்லை. பைக்கை அப்படியே விட்டு, குறுக்கு சந்தில் புகுந்து ஓடினர். பொதுமக்கள் சிலர் அவர்களை சிறிது தூரம் விரட்டியும் பிடிக்க முடியவில்லை. இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பைக்கை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண மண்டபத்திற்கு வரும் பெண்களை நோட்டம் விட்டு சினிமா பட பாணியில் கத்தி காட்டி மிரட்டி நகை பறித்த நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. பறிபோன நகைகளின் மதிப்பு சுமார் 3.2 லட்ச ரூபாய்.
போலீசார் கூறுகையில், ‘‘ பைக் ஆவணங்களை வைத்து நகை பறித்தவர்களின் விவரங்களை விசாரிக்கிறோம். விரைவில் அவர்களை பிடித்து விடுவோம், ’’ என்றனர்.

0 comments: