Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by Unknown in ,    
திருப்பரங்குன்றத்தில் தண்டவாளத்தில் இரும்பு கம்பிகள்: ரெயிலை கவிழ்க்க சதி?
கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இன்று அதிகாலை 4 மணி அளவில் பசுமலை பராக்கா நகர் பகுதியில் தண்டவாளத்தை அந்த ரெயில் கடக்கும்போது திடீரென ஒரு மாதிரியாக சத்தம் கேட்டது. ஆனாலும் என்ஜின் டிரைவர் சாமர்த்தியமாக ரெயிலை ஓட்டி திருப்பரங்குன்றத்தில் நிறுத்தினார்.
அங்கு ரெயில்வே அதிகாரியிடம், பசுமலை பராக்கா நகர் பகுதியில் ரெயில் வரும்போது ஒரு மாதிரியாக சத்தம் கேட்டது என்னவென்று தெரியவில்லை. பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டு புறப்பட்டார்.
ரெயில்வே அதிகாரி உடனே மதுரை ரெயில்வே அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது அந்த பகுதி தண்டவாளத்தில் இரும்பு கம்பிகள் கிடந்தன. அதனை அப்புறப்படுத்தி விசாரணையை தொடங்கினர்.
ரெயிலை கவிழ்க்கும் சதி நோக்கத்தில் இந்த மாதிரி இரும்பு கம்பிகளை தண்டவாளத்தில் யாரும் போட்டு சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். அப்போது பசுமலை பகுதியில் நடந்து வரும் கட்டிடப் பணிக்கு பயன் படுத்தப்பட்ட கம்பிகளை யாரோ மர்ம ஆசாமிகள் திருடிச் செல்லும்போது தண்டவாளத்தில் சிதற விட்டு சென்றிருப்பது தெரிய வந்தது.
இரும்பு கம்பிகளை திருடிய ஆசாமிகள் யார்? தண்டவாளத்தில் தானாக அவைகள் விழுந்ததா? அல்லது வேண்டுமென்றே போட்டுச் சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

0 comments: