Monday, September 29, 2014

On Monday, September 29, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்தவும், சிகிச்சைக்கான உபகரணங்கள், மருந்துகளை தேவைக்கேற்ப வைத்திருக்கவும், லஞ்ச ஊழலைக் களையவும் வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக சனியன்று காலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வாலிபர் சங்க தெற்கு மாநகரத் தலைவர் ஆறுக்குட்டி தலைமை வகித்தார். இதில் ஏழை மக்களின் ஒரே ஆதாரமாகத் திகழும் அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள், சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் இல்லாமல் இருப்பதை கண்டித்தும், உடனடியாக இம்மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்களை நிரப்பியும், அனைத்து மருத்துவ வசதிகளையும் உறுதிப்படுத்த கோரிக்கை விடப்பட்டது 
இத்துடன் திருப்பூர் மாவட்டத் தலைநகரமாக இருப்பதால் அரசு மருத்துவக் கல்லூரி அமைத்தும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முழக்கம் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வாலிபர் ஒருவர் நோய்த் தாக்குதலுக்கு ஆளானவர் போல் சித்திரித்து தலை மற்றும் உடலில் கட்டுப் போட்டு படுக்கையில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். பலரும் தங்கள் தலையிலும், கைகள், உடலிலும் கட்டுப் போட்டுக் கொண்டு மருத்துவமனை சீர்கேட்டைக் களைய ஆவேச முழக்கமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்க மாநிலத் தலைவர் செ.முத்துக்கண்ணன், மாவட்டச் செயலாளர் ச.நந்தகோபால், மாநகரச் செயலாளர் சௌ.ஸ்டாலின்பாரதி ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி உரையாற்றினர். மாவட்டத் தலைவர் வை.ஆனந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆ.சிகாமணி உள்பட மாவட்ட, நகர நிர்வாகிகள் உள்பட பெருந்திரளான இளைஞர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். நிறைவாக ஞானசேகரன் நன்றி கூறினார்.
----------

0 comments: