Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
திருப்பூர் : போக்குவரத்து மாற்றம், மாநகராட்சி குழாய்களை மாற்றுவது நீடிக்கும் இழுபறியால், ரயில்வே சுரங்க பாலம் பணிகள் தாமதமாகி வருகிறது.

திருப்பூர் நகரை இரண்டாக பிரிக்கும் ரயில்வே வழித்தடத்தை கடக்க, இரு புறமும் உள்ள மக்கள், பல கிலோ மீட்டர் தூரம் சுற்றியும், இரண்டு ரயில்வே கேட்களில் காத்திருக்கவும் வேண்டியுள்ளது. முதல் ரயில்வே கேட்டுக்கு மாற்றாக, பிரிட்ஜ்வே காலனி மற்றும் கோர்ட் வீதியை இணைக்கும் வகையில், டி.எம்.எப்., அருகில், 27 கோடி ரூபாய் செலவில் சுரங்க பாலம் அமைக்க, 2007-08ம் ஆண்டு பணி துவங்கியது. ரயில்வே துறை சார்பில், ரயில்வே வழித்தடத்தின் கீழ், பாக்ஸ் வடிவ சுரங்க பாலம் அமைக்கப்பட்டது. நீதிமன்ற வழக்கு, நிலம் எடுப்பதில் சிக்கல் போன்றவற்றால், நெடுஞ்சாலைத்துறை (திட்டம்) சார்பில் பணி மேற்கொள்வது இழுபறியானது. நிலம் கையகப்படுத்தப்பட்டு, கடந்த பிப்., மாதம் பணி துவங்கியது.

ஓம்சக்தி கோவில் லட்சுமி நகர் பகுதியில், 750 மீட்டர் நீள பாலத்துடன் கூடிய கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பிரிட்ஜ் வே காலனி ரோட்டை இணைக்கும் உயர் மட்ட பாலம் பணி, மாநகராட்சி கழிவுநீர் கால்வாயை மாற்றி அமைக்காததால், இழுபறியாகி வருகிறது. இந்த சூழலில், கோர்ட் வீதியில் பணிகளை துவக்க வசதியாக, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஊத்துக்குளி ரோட்டில் வரும் வாகனங்கள், சுரங்க பாலத்தை பயன்படுத்த, கோர்ட் வீதியில் இரு புறமும் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி; ரயில்வே சுரங்க பாலத்துக்கு இணைப்பு ரோடு அமையும் வகையில், கோர்ட் ரோட்டில் சரிவாக 150 மீட்டர் நீளத்துக்கு கான்கிரீட் பாலம் அமைக்கும் பணி மற்றும் ஊத்துக்குளி ரோட்டில் வரும் வாகனங்கள் நேராக செல்லும் வகையில், உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இதற்காக, கோர்ட் ரோட்டின் மத்தியில் அமைந்துள்ள பாதாள சாக்கடை திட்ட குழாய்கள், குடிநீர் குழாய்கள், தொலைத்தொடர்பு கேபிள்கள் மற்றும் இரு புறமும் உள்ள மின் கம்பங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டி உள்ளது. இப்பணிக்காக, நெடுஞ்சாலைத்துறை சார்பில் மாநகராட்சி, மின் வாரியத்துக்கு உரிய தொகை செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சி குழாய்கள் மாற்றும் பணி இழுபறியாகி வருகிறது. கோர்ட் வீதியில் போக்குவரத்தை மாற்றியமைத்தால் மட்டுமே, பணி துவங்க முடியும் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், ஊத்துக்குளி ரோடு, குமரன் ரோட்டில் வரும் வாகனங்கள் மற்றும் கோர்ட் வீதிக்கு வரும் வாகனங்கள் பயன்படுத்த வேண்டிய வழித்தடங்கள் குறித்து, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், " மாநகராட்சி குழாய்களை மாற்றி அமைத்த பிறகே, கோர்ட் ரோட்டில் பாலம் பணி துவங்க முடியும். உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிந்த பிறகு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, பணிகளை துவக்கலாம் என, மாநகராட்சி மற்றும் போலீசார் தெரிவித்தனர். போக்குவரத்தை மாற்றி அமைப்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அடுத்த வாரத்தில் பணி துவங்கும்' என்றனர்.

0 comments: