Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
திருப்பூர் : டாஸ்மாக் இணை நிர்வாக இயக்குனர் நடவடிக்கை மூலம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருப்பூர் டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்கள் தொடர்ந்து பணியில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில், அதிக விலைக்கு மது பாட்டில் விற்பனை, விற்பனை தொகை மற்றும் சரக்கு இருப்புகளில் முறைகேடு, பதுக்கல் விற்பனைக்காக அதிக எண்ணிக்கையிலான மதுபாட்டில்கள் மொத்தமாக விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு புகார்கள் சென்றன. கடந்த வாரம், டாஸ்மாக் இணை நிர்வாக இயக்குனர் மோகன் தலைமையிலான குழுவினர் திருப்பூர் மதுக்கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். ஆய்வில், புகார்கள் உறுதிப்படுத்தப்பட்டன.

மதுக்கடைகளில் பணியாற்றிய மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் 48 பேரை சஸ்பென்ட் செய்ய அவர் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு மாவட்ட மேலாளர் மூலம் உரிய ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளான ஊழியர்கள் 48 பேரும் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மிகவும் வேண்டப்பட்ட நபர்கள் என்பதால், அவர்களுக்கு சஸ்பெண்ட் ஆர்டர், சம்பிரதாயமாக மட்டுமே வழங்கப்பட்டதாகவும், அவர்கள் தொடர்ந்து அதே கடைகளில் பணியாற்றி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இவ்வாறு, சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள், ஒரு வாரமாக பணியில் உள்ளனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர்களுக்குப் பதிலாக, கூடுதல் பொறுப்பாக வேறு பகுதிகளைச் சேர்ந்த மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நியமிக்கப்படவில்லை என, முறையாகப் பணியாற்றும் சில ஊழியர்கள் குற்றம் சுமத்துகின்றனர். 

இது குறித்து டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் ரகமது அலியிடம் கேட்ட போது,'கடந்த ஏப்., மாதம் வரை நடவடிக்கைக்கு ஆளான ஊழியர்கள் அரசு உத்தரவுப்படி மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர். கடந்த வாரம் சஸ்பெண்ட் ஆன ஊழியர்களுக்கு பதிலாக, மாற்று ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, அது குறித்த கோப்புகள் என்னிடம் உள்ளன. அவர்கள் தொடர்ந்து பணியாற்றுவதாக வந்த புகார் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்', என்றார்.

இப்புகார் குறித்து அதிகாரிகள் கவனத்துக்கு சென்றதால், சஸ்பெண்ட் செய்யப்பட்டும், கடைகளில் பணியாற்றி கொண்டிருந்த ஊழியர்கள் நேற்று காலை, வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவம் திருப்பூர் டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments: