Thursday, September 25, 2014

On Thursday, September 25, 2014 by Unknown in ,    




செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதையில் மங்கள்யான் விண்கலத்தை நிலைநிறுத்தும் பணி வெற்றிகரமாக நடந்தது. இந்த நிகழ்வை பிரதமர் நரேந்திரமோடி பார்வையிட்டார்.
 
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆராய ‘மங்கள்யான்’ விண்கலம் உருவாக்கப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. 
 
ரூ.460 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம் 300 நாட்களுக்கும் அதிகமாக விண்ணில் பயணம் செய்து திட்டமிட்டப்படி இன்று காலை சரியாக 7.17 மணிக்கு செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையை அடைந்தது.
 
அப்போது அதில் உள்ள லாம் என்ஜின் மற்றும் அதனுடன் பொருத்தப்பட்டுள்ள 8 சிறிய என்ஜின்கள் 24 நிமிடங்கள் எரியூட்டப்பட்டு அதன் வேகத்தை குறைத்து செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. 
 
இந்த அரிய நிகழ்வை பெங்களூர் பீனியாவில் உள்ள இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து பிரதமர் நரேந்திரமோடி நேரில் பார்வையிட்டார்.
 
விண்கலத்தில் உள்ள முக்கிய என்ஜினை நேற்று இயக்கி சோதனை செய்து பார்க்கப்பட்டது. அது வெற்றிகரமாக அமைந்தது. மேலும் ஒரு சிறிய திருத்தம் செய்யப்பட்டு அந்த விண்கலம் சரியான திசையில் திருப்பி விடப்பட்டது. 
 
அந்த விண்கலம் தற்போது வினாடிக்கு 22.1 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. அதிகாலை அந்த பயண வேகம் வினாடிக்கு 4.4 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டு செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
 
செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பிய முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது.
 
மங்கள்யான் விண்கலம் 300 நாட்களுக்கு மேல் பயணம் செய்து இலக்கை எட்டி உள்ளது. முதல் முயற்சியிலேயே மங்கயான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தி வரலாற்று சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 
 
மங்கள்யான் விண்கல திட்டம் வெற்றி பெற்றதற்கு அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜெட் பிரோபல்சன் ஆய்வுக்கூடம் இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது

0 comments: