Thursday, September 25, 2014

On Thursday, September 25, 2014 by Unknown in ,    

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகளை வலுவுள்ள வகையில் முன்னெடுத்துச் செல்வதற்காக தேசிய சபையொன்றை உருவாக்குவதென்று, அதன் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
 
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் செயற்குழுத் தலைவருமாகிய ஆர்.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூடி முக்கிய தீர்மானங்களை மேற்கொண்டிருக்கின்றது.
 
தமிழ்த்தேசிய கூட்டமைப்பை ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாக மாற்றுவதற்குரிய யாப்பு ஒன்றைத் தயாரிப்பது, பலதரப்பட்ட மக்கள் அமைப்புக்களை ஒன்றிணைத்து ஒரு தேசிய சபையை உருவாக்குவது, வடமாகாண சபையின் செயற்பாடுகளை கட்டுக்கோப்பான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வது என்பது உள்ளிட்ட நான்கு முக்கிய தீர்மானங்கள் இந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார்.
 
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற அரசியல் கட்சிகள் தத்தமக்கென பிராந்தியங்களில் செல்வாக்கு பெற்றிருக்கின்றபோதிலும், அவற்றின் செயற்பாடுகள் உளப்பூர்வமாக மேற்கொள்ளப்படவில்லை என்ற விமர்சனம் குறித்து கேட்ட போது, அத்தகைய ஒரு குறைபாடு இருப்பதை ஒப்புக்கொண்ட கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், அரசியல் செயற்பாடுகளில் மக்களை ஒன்றிணைப்பதற்காக அமைக்கப்படவுள்ள தேசிய சபை உருவாக்கப்படும்போது, இந்தக் குறைபாட்டை நீக்க முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.
 
கூட்டமைப்பின் நோக்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு, சரியான அரசியல் தீர்வொன்றின் தீர்வு காண்பதென்றும், அதற்கான முன்னெடுப்புக்கு சகலரையும் உள்ளடக்கிய தேசிய சபை பேருதவியாக இருக்கும் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
 
ஓன்றிணைந்த அரசியல் கட்சிகளின் அமைப்புக்கு அப்பால் பல்வேறு அமைப்புக்களை உள்ளடக்கிய இத்தகைய கட்டமைப்புக்கள் பல நாடுகளில் செயற்பட்டிருக்கின்றன, செயற்பட்டு வருகின்றன என்றும் அதனைப் பின்பற்றியே தாங்களும் ஈபிஆர்எல்எவ் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சிகளின் மாநாடுகளில் மேற்கொண்ட தீர்மானங்களின் அடிப்படையில் தேசிய சபையொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

0 comments: