Friday, September 26, 2014

On Friday, September 26, 2014 by farook press in ,    
திருப்பூர், செப்.26-
பெரும்பான்மை மதவாத அரசியலை எதிர்கொள்ள சிறுபான்மை மதவாத அரசியல் துணை செய்யாது. இதனால் பெரும்பான்மை மக்கள் அச்சத்தின் பிடியில் தள்ளப்படுவார்கள். எனவே ஜனநாயக அரசியலின் மூலம்தான் மதவாத அரசியலை முறியடிக்க முடியும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ. கூறினார்.
திருப்பூர் அரிசிக்கடை வீதியில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில் கே.தங்கவேல் பேசியதாவது:
பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு திருப்பூரில் மதவாத சக்திகள் செயல்பாடு அதிகரித்துள்ளன. இவற்றை உழைப்பாளி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பிறமதத்தினரின் வழிபாட்டு உரிமையில் தலையிட்டு இந்து மதவெறியர்கள் தகராறு செய்யும்போது, அரசு நிர்வாகம், அவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்காமல், சிறுபான்மை மதத்தினரை விட்டுக் கொடுத்து போங்கள் என புத்திமதி சொல்கின்றனர். அரசு நிர்வாகமே இந்து அமைப்புகளுக்கு ஒருதலைப்பட்சமாக சாய்மானமாக நடந்து கொள்கின்றனர்.
ஏதேனும் கோரிக்கை அல்லது பிரச்சனைக்காக கம்யூனிஸ்ட் கட்சியோ, இதர அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டால் ஏகப்பட்ட கெடுபிடி செய்யும் காவல் துறையினர், இந்து மத அமைப்புகளுக்கு அவர்களே வேண்டிய பாதுகாப்புகளைச் செய்து தருகின்றனர்.
10 சதவிகிதம் முஸ்லீம்கள் ஓட்டுப் பொறுக்குவதற்காக மதத்தைப் பயன்படுத்துகிறார்கள் என கம்யூனிஸ்ட்டுகளைச் சொல்லும் இந்து மதவெறியர்கள் 80 சதவிகிதம் இருக்கக்கூடிய இந்துக்களின் ஓட்டுக்களைப் பெறுவதற்காகத்தான் மதத்தை அரசியலுடன் கலக்கின்றனர்.
கடவுள் நம்பிக்கைக்காக அவர்கள் மதத்தைப் பயன்படுத்தவில்லை. மக்களின் மதஉணர்வை பயன்படுத்தி அரசியல் நடத்தி ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதற்காகத்தான் மதவாத அரசியல் நடத்துகிறார்கள். அதில் அவர்கள் தற்போது வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். எனவே இதை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இது உழைப்பாளி மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைப்பதாக இருக்கிறது.
இந்து மதவாத அரசியலை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொண்டு சிறுபான்மை மத அரசியலைச் சில அமைப்புகள் கையில் எடுக்கின்றன. முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர் என மத அரசியலில் ஈடுபட்டால், ஒரு மத அரசியலை எதிர்க்க மற்றொரு மத அரசியல் என்று போகும்போது அது பெரும்பான்மை மக்களிடம் அச்ச உணர்வைத்தான் ஏற்படுத்தும். எனவே மத அரசியலுக்கு மத அரசியல் மாற்றாகாது. எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் உழைக்கும் மக்களின் ஜனநாயக அரசியலில் ஈடுபடும்போதுதான் மதவாத அரசியலைத் தடுக்க முடியும். அதற்கான போராட்டத்தை நாம் நடத்த வேண்டும் என்று கே.தங்கவேல் கூறினார்.

0 comments: