Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
திருச்சியில் பிரதேச ராணுவ படை வீரர்களை தேர்வு செய்வதற்கான முகாம் நேற்று தொடங்கியது. இளைஞர்கள் ஏராளமானவர்கள் குவிந்ததனர்.
ஆள் சேர்ப்பு முகாம்
திருச்சியில் உள்ள 117 பிரதேச ராணுவ படையில் சிப்பாய் (பொது பிரிவு) 26 பணியிடங்கள் மற்றும் ஒரு சலவையாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான ஆள் தேர்வு முகாம் காஜாமலை கிம்பர் கார்டனில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை ஐந்தாவது பட்டாலியன் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.
முகாமில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், குஜராத், மகராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, கோவா, டையூ டாமன், லட்சதீவு, தாத்ரா அண்ட் நகர் ஹவேலி உள்பட யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 18 வயது முதல் 42 வரை உள்ளவர்கள் நேற்று காலை குவிந்தனர். காலை 5 மணி முதலே முகாம் தொடங்கியது. இந்த வீரர்கள் தேர்வு முகாமில் சுமார் 8 ஆயிரம் பேர் குவிந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஓட்டபந்தயம்
முதலில் தேர்வுக்கு வந்தவர்களின் உயரம் அளக்கப்பட்டு, 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், கயிறு ஏறுதல், நீளம் தாண்டும் போட்டிகள் மற்றும் உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் ஓட்டப்பந்தயத்தின் போது வெயிலின் தாக்கத்தால் கால் பாதத்தில் வெடிப்பு ஏற்பட்டு ஓட முடியாமல் பலர் பாதியிலே நின்றனர். சிலர் கீழே விழுந்தனர். இதனால் முகாமில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதேபோல உடற்தகுதி தேர்வில் சிலர் தோல்வி அடைந்தனர்.
ஓட்டபந்தயத்தின் போது தவறி கீழே விழுந்தவர்கள் மற்றும் கால்களில் வெயிலினால் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்காக அரசு மருத்துவ குழுவினர் தயாராக இருந்து பணியில் ஈடுபட்டனர். தேர்வுக்கு பள்ளி கல்வி சான்றிதழ்கள், மதிப்பெண் சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ் உள்பட இதர சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவ பரிசோதனை
நேற்று நடந்த உடல் தகுதி தேர்வு மற்றும் உடல் திறன் போட்டிகளில் உரிய மதிப்பெண் பெற்றவர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது. அதன்பின்னர் நேர்முக தேர்வு நடைபெற்ற பின் பிரதேச ராணுவத்தில் சேர்த்து கொள்ளப்படுவார்கள். வருகிற 20–ந் தேதி வரை வீரர்கள் தேர்வு முகாம் நடைபெறுகிறது.
பயிற்சியின்போது மாத சம்பளம் ரூ.5 ஆயிரத்து 700–ம், பயிற்சி முடித்த பின்னர் மாதம் ரூ.5.200 மற்றும் கிரேடு சம்பளம் ரூ.2 ஆயிரம், ராணுவ சம்பளம் ரூ.2 ஆயிரம் ஆகியவற்றுடன் அகவிலைப்படி ஆகிய அனைத்தும் வழங்கப்படும். மேலும் ராணுவத்தினருக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் வழங்கப்படும். பிரதேச ராணுவ படை பணி என்பது முழு நேர ராணுவ பணி ஆகாது. வருடத்தில் 2 மாதங்கள் மட்டுமே அவர்களுக்கு பணி காலம் ஆக இருக்கும் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
வீரர்கள் தேர்வு முகாமையொட்டி மைதானத்தில் குடிநீர் வசதி, உணவு வசதி உள்பட அடிப்படை வசதிகளை பிரதேச ராணுவ படையினர் செய்திருந்தனர். மேலும் மாநகர போலீசார் பாதுகாப்பு பணியை செய்து இருந்தனர். ராணுவ படைக்கு வீரர்கள் தேர்வுக்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்ததால் அந்த பகுதியில் நேற்று போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

0 comments: