Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
உள்ளாட்சி இடைத்தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கை சின்னத்தில் வித்தியாசம் இருப்பதாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரெக்ஸ், மாநகராட்சி தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்தார்.

அதிகாரியிடம் வேட்பாளர் புகார்

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. திருச்சி மாநகராட்சியில் 15, 32-வது வார்டுகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம் நேற்று முன்தினம் பொருத்தப்பட்டன. இந்நிலையில் 32-வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரெக்ஸ் நேற்று திருச்சி மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான தண்டபாணியிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அந்த புகார் மனுவில், ‘‘மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் கை சின்னம் வாக்காளர்களுக்கு தெரியாத அளவில் சிறியதாகவும், சுயேச்சைகள் சின்னம் போல வித்தியாசமாகவும் உள்ளது. முறையான கை சின்னத்தை கண்களுக்கு தெரியும் வகையில் மாற்றி பொருத்த வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

கை சின்னத்தில்...

மனுவை பெற்றுக்கொண்ட தேர்தல் அதிகாரி தண்டபாணி கூறுகையில், ‘‘வேட்பாளர்களின் சின்னம் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. அதில் எதுவும் மாற்றங்கள் செய்யப்படவில்லை. மேலும் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து சின்னம் பதிவிறக்கம் செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. சின்னத்தில் வித்தியாசம் இருந்தால் தேர்தல் ஆணையத்திடம் தான் புகார் தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு வேட்பாளர் ரெக்ஸ், சின்னத்தை அச்சிடும் போது வேண்டுமென்றே சிறியதாக அச்சிடப்பட்டுள்ளது. இதனை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஆனால் அங்கீகரிக்கப்பட்ட சின்னமே பொருத்தப்பட்டுள்ளது. இதனை மாற்ற முடியாது என்று தேர்தல் அதிகாரி தண்டபாணி தெரிவித்தார். 

0 comments: