Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by farook press in ,    
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயின்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு, ஆசிரியர் பணிக்கான தகுதிச் சான்றிதழை வழங்கியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக அரசே ஆசிரியர் பணிக்கான தகுதிச் சான்றிதழை அளித்துவிட்டு, மீண்டும் ஒரு தகுதித் தேர்வு நடத்துவது ஏன் என்றும் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் கிராமப்புற, தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ள கருணாநிதி, இதனால், ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து முடிந்த நிலையில், பலர் வேலை கிடைக்காத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அனைத்துப் பிரச்னைகளிலும் அலட்சியம் காட்டுவதுபோல் இல்லாமல், ஆசிரியர் பிரச்னை தலையானது என்பதை மனதில் கொண்டு போராட்டம் நடத்தும் ஆசிரியர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

0 comments: