Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    

கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு காந்திய மக்கள் இயக்க வேட்பாளராக டாக்டர் டென்னிஸ் கோவில்பிள்ளை போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அந்த கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் கோவையில் உள்ள பல்வேறு இடங்களில் பிரசாரத்தை தொடங்கினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ஒரு மாநகராட்சி மேயர் வேட்பாளரை வெற்றி பெற செய்வதற்கு ஆட்சிப்பொறுப்பில் உள்ள 15–க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் இங்கு வந்து முற்றுகையிட்டு இருப்பதும், முதல்–அமைச்சரே இங்கு வந்து பிரசாரம் செய்ய உள்ளதும் எந்த வகையிலும் ஆரோக்கியமான அரசியல் அல்ல.
இத்தகையை சூழலில் நாங்கள் எளிமையாய், சத்தியம் சார்ந்து இந்த தேர்தலில் சரித்திரம் படைப்போம். எங்கள் இயக்க வேட்பாளர் வெற்றி பெற்றால் கோவை மாநகராட்சி பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் தனியார் துறையை விட சிறந்து விளங்கிடவும், சிறப்பான சேவை அளிக்கவும் நடவடிக்கை எடுப்பார். ஊழலில் நிழல்படாத, அற்புதமாக நிர்வாகத்தை தருவதற்கு எங்கள் வேட்பாளர் இருப்பார்.
இந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வின் வாக்கு வங்கி அ.தி.மு.க.வை எதிர்ப்பதற்காக பா.ஜனதாவுக்கு திருப்ப கூடும். ஆனால் எல்லா கட்சிகளிலும் நேர்மையான பொது அரசியல் இருக்க வேண்டும் என நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எங்கள் இயக்க வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள்.
ஸ்தாபன காங்கிரசில் இருந்து வந்தவர்கள் அத்தனை பேரும் எங்கள் இயக்கத்துக்கு வாக்களிப்பார்கள். அவர்கள் தங்களின் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மை வாக்குகள் எங்களுக்கு கிடைக்கும்.
தமிழ்நாட்டில் 80 சதவீத காங்கிரஸ் தொண்டர்கள் ஜி.கே.வாசனுடன் இருக்கிறார்கள். ஆனால் அவருக்கு கொடுக்க வேண்டிய அங்கீகாரத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கொடுப்பதில்லை. காமராஜரின் பெயரைச் சொல்வதற்கு அவர் தன்னை தகுதிப்படுத்திக்கொண்டுள்ளார். இவர் போன்றவர்களுக்கு காங்கிரசில் இடம் இல்லை.
ஆகவே காங்கிரசை விட்டு விரைவாக அவர் வெளியே வரவேண்டும். வெளியே வந்து புதிய அமைப்பை உருவாக்க வேண்டும். அந்த அமைப்போடு கைகொடுக்க காந்திய மக்கள் இயக்கம் தயாராக உள்ளது.
இதன் மூலம் 2016–ல் ஒரு மாற்று அரசியல் அணியை உருவாக்க முடியும். குறிப்பாக அவர் உருவாக்கும் அமைப்பு, எங்களது இயக்கம் மற்றும் ம.தி.மு.க, இடதுசாரிகளை வைத்து ஒரு மாற்று அணியை உருவாக்க வாய்ப்புகள் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: