Tuesday, September 16, 2014

On Tuesday, September 16, 2014 by farook press in ,    
திருப்பூர் : திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, வெளிநாட்டு ராணுவ வீரர் ஆடை உற்பத்திக்கான, வர்த்தக விசாரணை வரத்துவங்கியுள்ளது.

மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ள திருப்பூர் பின்னலாடை துறைக்கு, வெளிநாடுகளில் இருந்து ஏராளமான ஆர்டர்கள் வரத்துவங்கியுள்ளன. பல்வேறு காரணங்களால், சீனா, வங்கதேசம் போன்ற போட்டி நாடுகள், ஆடை உற்பத்தியை குறைத்துள்ளன. இது, திருப்பூரின் ஆடை ஏற்றுமதிக்கு சாதகமாகியுள்ளது. கோடை, குளிர், இளவேனில் சீசன் கால ஆடை உற்பத்திக்கான ஆர்டர் மட்டுமின்றி, பிரசித்தி பெற்ற ஆர்டர்களும், திருப்பூர் நோக்கி வரத்துவங்கியுள்ளன. சமீபத்தில் நடந்த 'பிபா' உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு, ரசிகர்கள் அணிந்த ஆடை உற்பத்தி வாய்ப்பு, திருப்பூருக்கு கிடைத்தது. தற்போது, வெளிநாட்டு ராணுவ வீரர்கள் அணியும் உள்ளாடை உற்பத்திக்கான வர்த்தக விசாரணை வரத்துவங்கியுள்ளது.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் துணி உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:ஆரம்ப காலத்தில் இந்திய ராணுவ வீரர்களுக்கான, ஆடை உற்பத்திக்கு ஆர்டர் கிடைத்தது. தற்போது, இந்த ஆர்டர்களை பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. மின்வெட்டு, சாய ஆலை பிரச்னை என தொடர் பாதிப்புகளில் இருந்து விடுபட்டுள்ள தொழில் துறைக்கு, சீனா, வங்கதேசம் போன்ற போட்டி நாடுகளுக்கு செல்ல வேண்டிய ஆர்டர்கள் கிடைக்கத் துவங்கியுள்ளன.சீசன் கால ஆர்டர்களோடு, தற்போது ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ராணுவ வீரர்கள் அணியும் ரவுண்ட் நெக் பனியன், ஜட்டி, வெண்மை நிற கை பனியன் உற்பத்தி செய்வதற்கான விசாரணை வரத்துவங்கியுள்ளது.

பருத்தி நுாலிழையில் உற்பத்தி செய்யப்படும் இந்த ஆடை உற்பத்திக்கு, ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கின்றனர். நுால் விலை, டாலர் மதிப்பு சீராக உள்ளது. எனவே, இவ்வகை ஆர்டர்களை முழுமையாக பெற முடியும். விதிமுறைகளுக்கு உட்பட்டு, சாம்பிள் ஆடைகள் தயாரித்து, பல்வேறு ஆய்வுகளுக்குப் பின் அனுப்பப்படுகிறது. இந்த ஆர்டர் வசமானால், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு தொடர்ந்து ஆர்டர் கிடைக்கும்.இவ்வாறு, கூறினார்.

0 comments: