Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by Unknown in ,    
மதுரை ரெயில் நிலையத்தில் பயணிகளை பீதிக்குள்ளாக்கும் நாய்கள் கூட்டம்
மதுரை ரெயில் நிலையம் தென் தமிழ்நாட்டில் மிக பெரிய ரெயில் நிலையம் ஆகும். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக மீனாட்சி அம்மன் கோவிலை காண வெளி மாநிலத்தவர்கள் மட்டும் அல்லாமல் வெளி நாட்டினரும் ரெயில் மூலம் மதுரை வருகிறார்கள்.
இப்படி பரபரப்பாக காணப்படும் இந்த ரெயில் நிலையத்தில் பயணிகளோடு பயணிகளாக நாய்கள் சுற்றி திரிவதும், பயணிகள் தங்கும் இடத்திலேயே சுதந்திரமாக படுத்து தூங்குவதுமாக இருக்கிறது.
கிழக்கு நுழைவு வாயில் வழியாக அவசர அவசரமாக செல்லும்போது நாய்கள் மீது பயணிகள் மிதித்து விட்டால் கடிக்கும் நிலை உள்ளது. நூற்றுக்கணக்கான பயணிகள் குழந்தைகளுடன் ஓய்வு எடுக்கும் இடத்திலேயே பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி திரிவதால் எப்போது யாரை கடிக்கும் என்ற அச்சநிலை பயணிகளிடையே நிலவி வருகிறது.
ரெயில் நிலையத்தில் பாதுகாப்புக்காக பணியில் இருக்கும் போலீசார் பயணிகளின் உடமைகளை சோதனையிட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கும் நிலையில் இந்நாய்களை மட்டும் எப்படி உள்ளே அனுமதிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இது குறித்து பயணிகள் ரெயில் நிர்வாகத்தில் புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என பயணிகள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள்.
இது பற்றி ரெயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ரெயில் நிலையத்திற்குள் நுழையும் நாய்களை எங்கள் ஊழியர்கள் விரட்டியடித்தும் திரும்ப, திரும்ப உள்ளே வருகிறது. காரணம் பயணிகள் சாப்பிட்டு விட்டு குப்பை தொட்டியில் போடும் மீதமுள்ள உணவு பொருட்களை தின்று பழகிவிட்டதால் திரும்ப, திரும்ப வருகிறது. இதை பிடித்து செல்லும்படி மாநகராட்சியில் தெரிவித்தும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
பயணிகளை நாய்கள் கடித்த பிறகுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காத்து இருக்காமல் உடனடியாக ரெயில் நிலையத்திற்குள் பயணிகளை பீதியடைய செய்யும் வெறிநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நுழையு வாயிலில் பாதுகாப்புக்கு இருக்கும் போலீசார்களாவது உள்ளே நுழையும் நாய்களை தடுத்து விரட்ட வேண்டும் எனவும் பயணிகள் கோரியுள்ளனர்.
இது குறித்து மாநகராட்சி சுகாதார அதிகாரி ஒரு வரிடம் கேட்டபோது, ரெயில்வே நிர்வாகத்திடம் இருந்து புகார் வரும் போதெல்லாம் நாய்களை பிடித்து வருகிறோம். ஆனாலும் நாய்கள் மீண்டும், மீண்டும் அங்கு செல்கிறது. காரணம் பயணிகள் சாப்பிட்டு விட்டு போடும் மிச்ச உணவுக்காகவும், அங்கு நடத்தப்படும் சில ஓட்டல்களில் இருந்து தொட்டியில் போடப்படும் சிக்கன் கழிவுகளுக்காகவும் அதன் வாசனையை நுகர்ந்து எங்கிருந்தாலும் வந்து விடுகிறது. எனவே ரெயில் நிலையத்திற்குள் உணவுப்பொருள் கழிவுகள் போடபயன்படுத்தப்படும் தொட்டிகளை வெளியே வைத்தால் நாய்கள் நுழைவதை ஓரளவு கட்டுப்படுத்தலாம் என்றார்.
பயணிகள் நலன் கருதி ரெயில் நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து வெறிநாய்களை விரட்டியடித்து பயணிகளை பீதியில் இருந்து காக்க வேண்டும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

0 comments: