Tuesday, September 02, 2014

On Tuesday, September 02, 2014 by farook press in ,    
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே பள்ளிக் கழிப்பறையில் 6-ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேர்ணாம்பட்டு பாகர் உசேன் வீதியைச் சேர்ந்தவர் பெயிண்டர் கண்ணபிரான். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு ஹரிணி (11), ஜனனி என இரு மகள்கள். மஞ்சுளா இறந்து விட்டதால், ஆம்பூரைச் சேர்ந்த சித்ராவை, கண்ணபிரான் 2-ஆவது திருமணம் செய்து கொண்டார். அவர், தற்போது ஆம்பூரில் தாய் வீட்டில் உள்ளார்.
ஹரிணி, அங்குள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார். திங்கள்கிழமை காலை, வீட்டிலிருந்து பாட்டிலில் மண்ணெண்ணெய் எடுத்து வந்த ஹரிணி, பள்ளிக் கழிப்பறைக்குள் சென்று தனது உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அவரது அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த மாணவர்கள், ஹரிணி தீக்குளித்த விவரத்தை தலைமையாசிரியை ஆயிஷா பேகத்திடம் கூறினர்.
அவரது தகவலின்பேரில், போலீஸார் வந்து மாணவியை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு, சிகிச்சை பலனின்றி மாணவி ஹரிணி இறந்தார். தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.விஜயகுமார், டிஎஸ்பி இ.விஜயகுமார் ஆகியோர் அங்கு வந்து நேரடியாக விசாரணை நடத்தினர்.
இச்சம்பவம் தொடர்பாக பேர்ணாம்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பள்ளிக் கழிப்பறையில் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments: