Tuesday, September 02, 2014

On Tuesday, September 02, 2014 by farook press in , ,    
உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தலைப் புறக்கணிக்க தேமுதிக முடிவு செய்துள்ளது.
அதனால் பாஜகவுக்கு ஆதரவு தரலாமா என்பது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆலோசித்து வருகிறார்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் செப்டம்பர் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.  திமுக, மதிமுக, மமக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்துள்ளன. வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கு போதிய அவகாசம் தராமல், ஜனநாயகத்துக்கு முரணாக மாநிலத் தேர்தல் ஆணையம் நடந்துகொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலை தேமுதிகவும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.
இதற்கிடையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் இணைந்து உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக தேமுதிக தலைவர்களையும் சந்தித்து, பாஜக நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர். இதனால் தேமுதிக அதன் முடிவை உடனே தெரிவிக்க முடியாத நிலையில் இருக்கிறது. எனினும் தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவில் தேமுதிக உறுதியாக இருந்து வருகிறது.
பாஜகவுக்கு ஆதரவு? உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தலைப் புறக்கணிக்கும் நிலையில், பாஜக போட்டியிட்டால் அதற்கு ஆதரவு தெரிவிக்கலாமா என்பது தொடர்பாக தேமுதிகவில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
2016-இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட்டணியைத் தொடர வேண்டும் என்று பாஜக கருதுகிறது.
ஆனால் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் மத்தியில் தற்போது சரியான ஒருங்கிணைப்பு இல்லை. அதனால் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு விஜயகாந்த் ஆதரவு தருவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் பாஜகவுக்கு ஆதரவு தருவது தொடர்பாக விஜயகாந்த் முடிவு எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்தன.
விடுதலைச் சிறுத்தைகள் புறக்கணிப்பு: உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் இந்தக் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்களில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்பதற்கு உரிய கால அவகாசத்தைக் கொடுக்காமல், தமிழகத் தேர்தல் ஆணையம் திடீரென அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் ஆளும் கட்சியைத் தவிர, பெரும்பாலான கட்சிகள் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளன.
இந்தத் தேர்தல் ஜனநாயகரீதியாக நடைபெறுமா என அனைவருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்காமல், புறக்கணிக்க முடிவு செய்துள்ளது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

0 comments: