Tuesday, September 30, 2014

On Tuesday, September 30, 2014 by farook press in ,    
சென்னை, 
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை நந்தனம் கல்லூரி மாணவர்கள் நேற்று கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள நகர் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஜோனாஷா டி சன்னா (வயது 19) சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை தொலைக்காட்சி மூலம் பார்த்து மிகுந்த வேதனை அடைந்து, தனது வீட்டு சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்போல, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள வங்கி நாராயணபுரத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி நாகலட்சுமி (17) தனது உடலில் தானே மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
சென்னை நந்தனத்தில் உள்ள கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று ஜெயலலிதா மீதான தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் ஜெயலலிதாவை விடுதலை செய் என்று கோஷம் எழுப்பியதுடன், மத்திய அரசு மற்றும் நீதித்துறைக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வு மையத்தின் மாணவர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை முதலே வகுப்புகளுக்கு செல்லாமல் மாணவ-மாணவிகள் ஆய்வு மையத்தின் வெளியே அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ‘‘எங்களது ஆராய்ச்சி மையத்தின் தரத்தை உயர்த்தியதில் முதல்-அமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. மேலும், மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியும் ஊக்கப்படுத்தி வருகிறார். அவர் கைது செய்யப்பட்டது மாணவ-மாணவிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை கண்டிக்கும் வகையில் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகிறோம்’’, என்றனர். இந்த போராட்டத்தில் 80-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பினர்
ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முன்னதாக நேற்று மதியம் 12 மணி அளவில் கல்லூரி நுழைவு வாயிலில் மாணவ, மாணவிகள் திரண்டனர். அங்கு ஜெயலலிதாவை விடுவிக்கக்கோரி கோஷம் எழுப்பினர்.
கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மடிகணினி, கல்வி உதவித்தொகை, புத்தகப்பை, பாடப்புத்தகங்கள், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வழங்கிய ஜெயலலிதாவை விடுவிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி கல்லூரி மாணவ, மாணவிகள் 1,800 பேரும், குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி மாணவிகள் 3,925 பேரும், அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 1,490 பேரும் வகுப்புகளை புறக்கணித்து ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரையை அடுத்த மேலூரில் உள்ள அரசினர் கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புக்கு செல்லாமல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினார்கள்.

0 comments: