Wednesday, October 01, 2014

On Wednesday, October 01, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்ட கபடி கழகம் சார்பில் 41–வது மாநில அளவிலான இளையோர் ஆண்கள் கபடி சாம்பியன் பட்ட போட்டி திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3–ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. மின்னொளியில் நடைபெறும் இந்த போட்டியை மாநகர போலீஸ் கமிஷனர் சேஷசாய் தொடங்கி வைக்கிறார். மாநில கபடி கழக கொடியை தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழக தலைவர் சோலை எம்.ராஜாவும், மாவட்ட கபடி கழக கொடியை தலைவர் நாச்சிமுத்தும் ஏற்றி வைக்கிறார்கள். திருப்பூர் கபடி மற்றும் கல்வி அறக்கட்டளை சேர்மன் சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம் தலைமை தாங்குகிறார். மாநில அமெச்சூர் கபடி கழக பொதுச்செயலாளர் சபியுல்லா முன்னிலை வகிக்கிறார். 4–ந்தேதி(சனிக்கிழமை) நடைபெறும் 2–ம் நாள் போட்டியை போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசும், 5–ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தனும் தொடங்கி வைக்கிறார்கள். முடிவில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, மேயர் விசாலாட்சி, துணைமேயர் குணசேகரன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
32 அணிகள் பங்கேற்பு
இந்த போட்டி குறித்து மாவட்ட கபடி கழக செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:–
திருப்பூரில் நடைபெற உள்ள மாநில அளவிலான கபடி போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சுமார் 4 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் காலரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக மாநிலம் முழுவதும் இருந்து 32 அணிகள் திருப்பூர் வருகின்றன. இவர்களுக்கு தேவையான உணவு, தங்கும் இடம் உள்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணிக்கு 12 கிராம் தங்க காசும்,2–ம் இடம் பிடிக்கம் அணிக்கு 6 கிராம் தங்க காசும் வழங்கப்படுகிறது.முன்னதாக வீரர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் ஊர்வலம் மாநகராட்சி அலுவலகம் முன் தொடங்கி விளையாட்டு மைதானம் வரை நடக்கிறது. இந்த ஊர்வலத்தை திருப்பூர் கபடி கல்வி அறக்கட்டளை தலைவர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைக்கிறார். இவ்வாறு செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் கூறினார். அப்போது மாவட்ட கபடிக்கழக தலைவர் நாச்சிமுத்து, துணைத்தலைவர் சிவபாலன்,செயலாளர் முத்துசாமி, துணைசெயலாளர் பத்மநாபன், பொருளாளர் சீகல் துரைசாமி, கொங்கு முருகேஷ் ஆகியோர் அருகில் இருந்தனர்.

0 comments: