Wednesday, October 29, 2014

On Wednesday, October 29, 2014 by Unknown in ,    

அமராவதி அணையில் இருந்து 37 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம் ஆற்றுப்பகுதிகளில் வெள்ள அபாயம்  கரூர், :  அமராவதி அணை நிரம்பியதை அடுத்து அணையில் இருந்து 37 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் அமராவதி மற்றும் காவிரியாற்று பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 திருப்பூர் மாவட்டம், உடுமலையில் அமராவதி அணை உள்ளது. கரூர் மாவட்டத்தில் அமராவதி நீரைப் பயன்படுத்தி சுமார் 40ஆயிரம் ஏக்கர் பாசனவசதி பெறுகிறது. பழைய ஆயக்கட்டுப் பகுதிகள், புதிய ஆயக்கட்டுப்பகுதிகள், நீரேற்றுப்பாசன பகுதிகள் உள்ளன. 
மேலும் உள்ளாட்சிகளின் குடிநீர் கிணறுகளும் அமராவதி அணை நீரை நம்பி நீரேற்றம் செய்துகொண்டிருக்கின்றன. முறைவைத்து தண்ணீர் திறக்கப்பட்டுவந்த நிலையில் மழை காரணமாக நீர்த் திறப்பு நிறுத்தப்பட்டது.
 தொடர் மழையாலும் பழனி பகுதியில் இடைவிடாது மழை பெய்து வருவதாலும் நங்காஞ்சியாறு போன்ற உப நதிகளில் இருந்து வரும் வெள்ளநீரும் அமராவதி ஆற்றில் கலந்து வருகிறது. கரூர் பகுதிக்கு கரூர் அருகே உள்ள செட்டிபாளையம் தடுப்பணைக்கு அமராவதி நீர்வந்து அங்கிருந்து கரூர், பாலம்மாள்புரம். மேலப்பாளையம் பகுதி வழியாக கடைமடை பகுதியான திருமுக்கூடலூர் செல்கிறது. அங்குள்ள காவிரியாறில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் உபரிநீர் கலக்கிறது. செட்டிபாளையம் தடுப்பணை ரெகுலேட்டர்கள் மூலமாக பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது. 
 கடந்த 15 நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்ததாலும், தண்ணீர் திறந்துவிடாததாலும், அணையின் நீர்மட்டம் மள மள என உயர்ந்துவருகிறது. தற்போது அமராவதி அணையில் 85 அடிநீர் உள்ளதால் எந்நேரமும் அணை நிரம்பலாம் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு அணை நிரம்பியது. முழு கொள்ளளவான 90 அடியை எட்டியது. இதனையடுத்து உபரிநீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டுள்ளது.
அமராவதி அணையில் இருந்து உபரி நீரானது வினாடிக்கு 27ஆயிரம் கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது. இதுதவிர அமராவதி கிளை ஆறுகளில் இருந்து 10ஆயிரம் கன அடிநீர் ஆற்றில் கலக்கிறது. கரூர் மாவட்ட அமராவதி ஆற்றில் தற்போது 37ஆயிரம் கன அடிநீர்வந்துகொண்டிருக்கிறது.ஆற்றில் இறங்க வேண்டாம்
கரூர் கலெக்டர் ஜெயந்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: அமராவதி அணையின் முழுகொள்ளளவை நெருங்கியதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவந்துகொண்டிருக்கிறது. அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் கனமழை பெய்ததன்காரணமாக பவானி மற்றும் நொய்யல் ஆறுகளில் வெள்ளப்பெருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்ததன் காரணமாக குடகனாற்றில் வெள்ளப்பெருக்கும், ஏற்பட வாய்ப்புள்ளது.
 இந்த வெள்ளநீர் காவிரியாற்றில் கலக்கிறது. இதனால் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கரூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி, பவானி, நொய்யல், குடனகனாறு, காவிரி ஆறுகளின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள்பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிப்பதற்காகவும், கால்நடைகள் தண்ணீர் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் ஆற்றில் கால்நடைகளுடன் தண்ணீரில் இறங்க வேண்டாம்.

 ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படின் மாவட்ட போரிடர் அவசரகால இயக்க மையத்தில் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசிக்கோ (எண் 1077) அல்லது சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.

0 comments: