Saturday, October 04, 2014

On Saturday, October 04, 2014 by farook press in ,    
வெள்ளகோவில்,
அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு அருகே உள்ள சித்தோட்டில் இருந்து தாராபுரம் வரை 100 கிலோ மீட்டர் தூரம் மனித சங்கிலி போராட்டம் 6–ந்தேதி நடக்கிறது.
அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டும் என்பதற்காக மனித சங்கிலி போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் வெள்ளகோவிலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு என்.எஸ்.என்.நடராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராமலிங்கம், நகராட்சி தலைவர் கந்தசாமி, ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் முத்துக்குமார், நகர அ.தி.மு.க. செயலாளர் டீலக்ஸ் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் என்.எஸ்.என்.நடராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:–
அ.தி.மு.க.பொதுசெயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி 6–ந் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம். இந்த மனித சங்கிலி போராட்டம் ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் தொடங்கி 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாராபுரம் வரை நடைபெறும். இந்த போராட்டத்தில் காங்கயம் சட்டமன்ற தொகுதியில் இருந்து 1½ லட்சம் பேர் கலந்து கொள்ள வேண்டும். வெள்ளகோவில், முத்தூர் பகுதிகளில் இருந்து 50 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும். வெள்ளகோவில், முத்தூர் பகுதிகளில் இருக்கும் வணிகர்கள் கடைகளை அடைக்க வேண்டாம். தொழிலாளர்களை மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுப்பி வையுங்கள்.
ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், ஒன்றியக்குழு தலைவர்கள், வார்டு செயலாளர்கள், ஆகியோர் பொதுமக்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகளும் பொதுமக்களை திரட்டி கலந்து கொள்ள செய்ய வேண்டும். இந்த போராட்டத்தால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மளிகைகடை வணிகர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், டீக்கடை உரிமையாளர்கள், சுமை தூக்குவோர் சங்கத்தினர், மற்றும் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0 comments: