Saturday, October 04, 2014

On Saturday, October 04, 2014 by farook press in ,    
திருப்பூர் அருகே சக்திவாய்ந்த செம்பு குடம் இருப்பதாக கூறி, ரியல் எஸ்டேட் அதிபரிடம் நூதன முறையில் ஏமாற்ற முயன்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் தாராபுரம் சாலை பழனிச்சாமி காம்பவுண்ட் சந்திராபுரம் பகுதியை சேர்ந்தவர் மணி(வயது 49). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்த தொழில் மூலம் திருப்பூர் கள்ளிப்பாளையம் காலனி செட்டிபாளையம் பகுதியைச்சேர்ந்த ராமசாமி(40) என்பவர் நண்பரானார்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த மணிக்கு தொழிலில் நஷ்டம் ஏற்படவே, 2 மாதங்களுக்கு முன் சக்தி வாய்ந்த செம்புத்தகடு ஒன்று உள்ளது அதை வாங்கி வைத்துக்கொண்டால், தொழிலில் லாபம் ஏற்படும் என ராமசாமி, மணியிடம் தெரிவித்தார். இதை நம்பி, செம்புத்தகடை வாங்கி வைத்து கொண்ட மணிக்கு ரியல் எஸ்டேட் தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து சம்பவத்தன்று, பூஜை செய்து வைக்கப்பட்டுள்ள சக்தி வாய்ந்த செம்புக்குடம் ஒன்று தனது நண்பர் ஒருவரிடம் உள்ளதாகவும், அதை வாங்கி வைத்துக்கொண்டால் தொழிலில் மேலும் வளர்ச்சியடையலாம் எனவும் ராமசாமி கூறியுள்ளார். இதை நம்பிய மணியை, நேற்று முன்தினம் இரவு காங்கயம் ரோடு பள்ளக்காட்டு புதூரில் உள்ள ஒரு வீட்டிற்கு ராமசாமி உள்ளிட்ட சிலர், காரில் வந்து அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
அங்கு வைத்து இருந்த ஒரு செம்பு குடத்தை காண்பித்து இது சக்தி வாய்ந்த செம்பு குடம் என்று கூறி அதற்கு ரூ.10 ஆயிரம் தருமாறு மணியிடம் கேட்டுள்ளனர். செம்பு குடத்தை பார்த்ததும் அது சக்தி வாய்ந்தது இல்லை என்பதை அறிந்து கொண்ட மணி அதற்கான பணத்தை தர மறுத்துள்ளார
அதைத்தொடர்ந்து, ராமசாமி மற்றும் அவருடன் வந்தவர்கள் மணியிடம் கத்தியைக்காட்டி மிரட்டி அவரிடம் இருந்த, ரூ.2 ஆயிரத்தை பறித்துள்ளார்கள். இது குறித்து, திருப்பூர் ரூரல் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர்.
அப்போது, அங்கு மூணாறு சிவன்மலை பகுதியை சேர்ந்த வீராச்சாமி(60), தேனி ஒயிட்ஹவுஸ் நகர் கருப்புசாமி(35), தேனி அல்லிநகரம் குட்டைத்தளம் தெருவைச்சேர்ந்த சுரேஷ் பாண்டி(31), தேனி என்.ஆர்.டி நகரைச் சேர்ந்த சாந்தி(40), திருப்பூர் அங்கேரிபாளையம் ஆசிரியர் காலனியைச்சேர்ந்த கேசவன்(46), அனுப்பர்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பார்த்திபன்(48), திருப்பூர் செட்டிபாளையத்தைச் சேர்ந்த ராமசாமி(40), திருப்பூர் திருவள்ளுவர்நகர் நெசவாளர் காலனியைச் சேர்ந்த கோபால்(47), திருப்பூர் பெருமாநல்லூர் எஸ்.டி.கே நகரைச்சேர்ந்த பாண்டியராஜன்(45), விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் முருகேசன்(51), திருப்பூர் காமராஜர் நகர் நாகராஜன் (56) உள்ளிட்ட 11 பேர் கொண்ட கும்பலை திருப்பூர் ரூரல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த கும்பல் வேறு யாரிடமாவது நூதன முறையில் பணத்தை ஏமாற்றியுள்ளார்களா? என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments: