Wednesday, October 01, 2014

On Wednesday, October 01, 2014 by farook press in ,    
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும் என்று மத்திய இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.
கோவையில் மத்திய இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும். இந்த தீர்ப்பை பொறுத்தவரை நீதி வழங்கப்பட்டு இருக்கிறது. அ.தி.மு.க சார்பில் பதவி ஏற்றுள்ள புதிய முதல்–அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு எனது சார்பிலும், கட்சியின் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.
அ.தி.மு.க. தலைமையின் மீதுள்ள பாசம் காரணமாக உணர்ச்சியால், தொண்டர்கள் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபடுவது இயல்பு. ஆனால் அது பொதுமக்களை பாதிப்பதாக இருந்துவிடக்கூடாது.
இந்த போராட்டத்தின் போது கடைகள் மீது தாக்குதல், பஸ்களுக்கு தீ வைத்தல் போன்றவை அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணரவேண்டும். தமிழகத்தில் ஏற்பட்ட அந்த நிகழ்வு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். தடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இது தமிழக காவல்துறைக்கு ஏற்பட்ட தலைகுனிவாகும்.
பா.ஜனதா கட்சி தமிழகத்தை ஆளும் காலம் நெருங்கி வருகிறது. பா.ஜனதாவுக்கு ரஜினிகாந்த் வந்தால் மகிழ்ச்சிதான். நல்லவர்கள் வருவது நல்லதுதான். நாட்டின் பொருளாதார தலைநகரமாக மும்பை விளங்குகிறது. அதுபோன்று தமிழ்நாட்டின் தொழில்நகரமாக கோவை விளங்குகிறது. கோவைக்கு பாதிப்பு என்றால் அது எல்லோரையும் பாதிக்கும். ஆகவே கோவை தொழில் மேம்பாட்டுக்கு மத்திய அரசு உதவிகரமாக இருந்து நடவடிக்கை எடுக்கும். ஜவுளிநகரம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. சென்ற இடமெல்லாம் அவருக்கு எந்த தலைவருக்கும் அளிக்கப்படாத அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இலங்கையால் தமிழக மீனவர்களுக்கு பிரச்சினை ஏற்படுவதை மத்திய அரசு கண்காணித்து வருகிறது. இரு தரப்பு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: