Wednesday, October 01, 2014

On Wednesday, October 01, 2014 by farook press in ,    
திருப்பூரில் புதிய தொழிற்பேட்டைகளை அமைத்து பனியன் தொழில் வேறு மாநிலத்திற்கு செல்வதை தடுக்க மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று சைமா சங்க தலைவர் வைகிங் ஈஸ்வரன் மகாசபை கூட்டத்தில் கோரிக்கை விடுத்து பேசினார்.
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கமான சைமாவின் 58–வது ஆண்டு மகாசபை கூட்டம் சங்க தலைவர் வைகிங் ஈஸ்வரன் தலைமையில் சைமா அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பொது செயலாளர் பொன்னுசாமி ஆண்டறிக்கை வாசித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:– வெளிமாநில பின்னலாடை விற்பனையில் ‘சி‘படிவம் சமர்ப்பிக்காதவர்கள் 5 சதவீதம் செலுத்தி 4 சதவீதம் திரும்ப பெறும்போது ஏற்படும் தாமதத்தை தமிழக அரசை கேட்டுக்கொள்வது, பனியன் பொருட்களுக்கு பேக்கிங் கமாடிட்டி எனப்படும் எடையளவு சட்டத்தில் இருந்து விலக்கு பெற மத்திய அரசை கேட்டுக்கொள்வது, தடையில்லாத மின்சாரம் வழங்கவும், பனியன் தொழில் சார்ந்த அனைத்து உப தொழில்களுக்கும் மின்சார உபயோகத்திற்கு தொழிற்சாலைக்கான கட்டணத்தை நிர்ணயிக்கவும் தமிழக அரசை கேட்டுக்கொள்வது, தொழிலாளர்கள் பயன்பெற இ.எஸ்.ஐ மருத்துவமனை தொடங்க நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்வது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் சங்க தலைவர் வைகிங் ஈஸ்வரன் பேசும்போது கூறியதாவது:–
திருப்பூர் நகரின் கடந்த கால வளர்ச்சி காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க சுமார் 5 ஆயிரம் பேர் வேலை செய்யும் அளவில் திருப்பூரில் இருந்து 20 முதல் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறு கிராமங்களில் 4 அல்லது 5 தொழிற்பேட்டைகளை அமைத்து அதில் அந்த கிராமத்தை சேர்ந்த, குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களையும், அதில் 50 சதவீதம் பெண்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதனால் சுமார் 25 ஆயிரம் பேர் பயன் அடைவார்கள். இதனால் வெளியூரில் இருந்து வரும் தொழிலாளர்கள் குறிப்பாக மகளிர் பாதுகாப்பாக வேலைகளில் சேர வாய்ப்புள்ளது. இதன் மூலம் திருப்பூரின் பனியன் தொழில் வேறு மாநிலத்திற்கு செல்வதை தடுக்க முடியும். சைமா சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டுமானப்பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளன. பனியன் தொழில் குறித்த அனைத்து பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு சைமா சங்கம் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் சங்க துணை தலைவர் கீதாஞ்சலி கோவிந்தப்பன், முன்னாள் தலைவர் கரோனா சாமிநாதன், பொருளாளர் ராமசாமி, ஆடிட்டர் லோகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: