Sunday, October 12, 2014

On Sunday, October 12, 2014 by Unknown in ,    
தீபாவளி பாதுகாப்பு நடவடிக்கை: ரெயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனைதீபாவளி பண்டிகையை கொண்டாட இப்போதே பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள். இதனால் ஜவுளிக்கடை, பல சரக்கு கடை பஜார் பகுதிகளில் கூட்டம் அலைமோதுகிறது.
மேலும் சொந்த ஊர்களில் தீபாவளியை கொண்டாட நினைப்பவர்கள் இப்போதே ரெயில் மற்றும் பஸ்களில் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பொது மக்கள் வசதிக்காக கூடுதல் சிறப்பு ரெயில்களும், பஸ்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரெயில் மற்றும் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் சிலர் லக்கேஜூடன் பட்டாசுகளையும் எடுத்து செல்வது வழக்கம். இதனால் பெரும் விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு பஸ், ரெயில்களில் பட்டாசுகள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு அசம்பாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என கருதி இந்த பாதுகாப்பு நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.
தீபாவளி கொண்டாட ஊருக்கு செல்லும்போது ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். எனவே ரெயில்களில் பட்டாசு கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை தீவிரமாக கண்காணிக்க தெற்கு ரெயில்வேயின் பாதுகாப்பு படை தலைமை ஆணையர் மோகன், சென்னை, மதுரை, திருச்சி, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய 6 கோட்ட பாதுகாப்புப்படை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து ரெயில்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மதுரை ரெயில்வே கோட்ட அதிகாரி ஒருவர் கூறும்போது, ரெயில்களில் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி யாராவது கொண்டு சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ரெயில்வே சட்டப்படி அதிகபட்சமாக ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
ரெயில்களில் பட்டாசு எடுத்து செல்லக்கூடாது என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
இதேபோல் பஸ்களில் பட்டாசு பார்சல்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே அந்தந்த பஸ்களில் உள்ள கண்டக்டர்கள் பயணிகளை கண்காணிக்க வேண்டும் எனவும், பயணிகள் யாராவது பட்டாசு எடுத்து சென்றால் அவர்களை பிடித்து அருகில் உள்ள போலீசில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டு இருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

0 comments: