Saturday, October 04, 2014

On Saturday, October 04, 2014 by farook press in ,    
ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதன் காரணமாக சென்னையில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விழாக்கள் களையிழந்தன. இதனால் கோயம்பேட்டில் பொரி மற்றும் பூசணிக்காய் போன்ற பொருட்கள் தேக்கம் அடைந்தன.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அவர், பெங்களூரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினரும், பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமாக அரசு அலுவலகங்களில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் ஆயுதபூஜை விழா, இந்த ஆண்டு சிறப்பாக நடைபெறவில்லை. குறிப்பாக தலைமைச் செயலகத்தில் ஆயுத பூஜை களை இழந்தத
இதேபோன்று, ஆயுதபூஜை விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாடும் ஆட்டோ நிறுத்த சங்கங்களும் ஆயுதபூஜையை புறக்கணித்தன.
இதனால், பூஜை பொருட்களான அவல், பொரி, கடலை மற்றும் திருஷ்டி பூசணிக்காய் போன்றவைகளின் விற்பனை மந்தமானது. கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த இதுபோன்ற பொருட்கள் தேக்கம் அடைந்தன.
பொரி-கடலை வியாபாரியான தினேஷ்குமார்-காளீஸ்வரி தம்பதியினர் கூறும்போது, “வழக்கமாக ஆண்டுதோறும் 350 முதல் 400 மூட்டை பொரி விற்பனையாகும். ஆனால் இந்த ஆண்டு 150 மூட்டை பொரி மட்டுமே விற்பனையாகி உள்ளது” என்றனர்.
பூசணிக்காய் வியாபாரி ஜெயந்தி கூறும்போது, “வழக்கமாக 1 டன் பூசணிக்காய் விற்பனை ஆகும். கடந்த ஆண்டு ஒரு பூசணிக்காய் 80 முதல் 120 ரூபாய் வரை விற்றபோதும் அனைத்து காய்களும் விற்றுத்தீர்ந்தன. ஆனால் இந்த ஆண்டு ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை காரணமாக போராட்டங்கள் நடைபெறுவதால் ஆயுதபூஜை சிறப்பாக இல்லை. இதனால் ஒரு பூசணிக்காய் 30 முதல் 50 ரூபாய் வரை என விலை குறைவாக இருந்தாலும் 50 சதவீதம் கூட விற்பனை ஆகவில்லை” என்றார்.
பழ வியாபாரி பேபி கூறும்போது, “கடந்த ஆண்டு அதிகமான விலை என்றாலும் அனைத்து பழங்களும் விற்றுவிட்டதால் நல்ல லாபம் கிடைத்தது. இந்த ஆண்டு, அதிக லாபமின்றி விற்றபோதும் பழங்கள் விற்பனையாகவில்லை. ஒரு கிலோ ஆப்பிள் 60 முதல் 100 ரூபாய்க்கும், சாத்துக்குடி 50 ரூபாய்க்கும், கொய்யாப்பழம் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் ஆயுத பூஜையை விமரிசையாக கொண்டாடவில்லை என்பதால் பழங்கள் விற்பனை மந்தமாக உள்ளது” என்றார்.

மழை இல்லாததால் பூக்கள் வரத்து வழக்கத்தைவிட குறைவாகவே இருந்தது. இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வந்த பூக்கள் அனைத்தும் விற்றுத்தீர்ந்தன என்று பூ வியாபாரிகள் சங்க தலைவர் எம்.டி.அருள் விசுவாசம் கூறினார்.

0 comments: