Wednesday, October 08, 2014

On Wednesday, October 08, 2014 by farook press in ,    
கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் டாக்டர் போல உடையணிந்து நகைகள் திருடியவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு 10–4–2014 அன்று பிரசவத்துக்காக ஒரு பெண் அனுமதிக்கப்பட்டு இருந்தார். டாக்டர் போல் உடையணிந்த ஒரு ஆசாமி அந்த பெண்ணின் அறைக்கு வந்து, அங்கு இருந்தவர்களை வெளியே அனுப்பினான். பின்னர், ஊசிபோடும் போல் நடித்து அந்த பெண்ணிடம் நகைகள் அணியக்கூடாது என்று கூறினான்.
அதை நம்பிய அந்த பெண் தான் அணிந்து இருந்த 15 பவுன் நகையை கழற்றி வைத்தபோது, அதை அந்த ஆசாமி திருடி சென்றுவிட்டான். இதுபோல் மாநகர பகுதியில் உள்ள 3 மருத்துவமனைகளில் சம்பவம் நடந்தது. எனவே போலீசார் அந்த மருத்துவமனைகளில் இருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது 3 சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே நபர் என்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அந்த ஆசாமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மும்பையில் பதுங்கி இருந்த அந்த நபரை கடந்த 25–7–2014 அன்று கைது செய்தனர். விசாரணையில், அவர் மராட்டிய மாநிலம் நாசிக் பகுதியை சேர்ந்த ராஜேஷ் அர்ஜூன் பாராஸ்கலே (வயது 28) என்பதும், அவருடைய தந்தை அர்ஜூன் பாராஸ்கலே டாக்டர் என்பதும் தெரியவந்தது.
மேலும் தமிழகத்தில் பல இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் திருடியதையும் அவர் ஒப்புக்கொண்டார். அதன்பேரில் போலீசார், ராஜேசை கோவை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது
இதற்கிடையே கோவை மாநகர பகுதியில் உள்ள 3 தனியார் மருத்துவமனைகளில் ராஜேஷ் திருடியதால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விசுவநாதனுக்கு தனிப் படை போலீசார் பரிந்துரை செய்தனர். அதைத்தொடர்ந்து ராஜேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் உத்தரவிட்டார்.
தற்போது ராஜேஷ் அர்ஜூன் பாராஸ்கலே கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவை தனிப்படை போலீசார் சிறைத்துறை அதி காரிகளிடம் வழங்கினார்கள். இந்த ஆண்டில் கோவை மாநகரில் பல்வேறு குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டதாக இதுவரை 37 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை வெரைட்டி ஹால் ரோட்டை சேர்ந்த வடமாநில வியாபாரிகள் ராம்சிங் உள்பட பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும், பணத்தையும் பறித்ததாக ஜிம் ஹக்கீம் உள்பட 15 பேர்மீது வெரைட்டி ஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இவர்களில் சிலர் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர். ஜிம் ஹக்கீம் உள்பட சிலர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை கோவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முரளீதரன், 20–ந்தேதிக்கு வழக்கை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

0 comments: