Wednesday, October 08, 2014

On Wednesday, October 08, 2014 by farook press in ,    
கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் சாணை பிடிக்கும் கல் விழுந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார். நஷ்டஈடு வழங்க கோரி உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.சென்னிமலை அருகே உள்ள வெள்ளோட்டை அடுத்த கவுண்டச்சிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணியம். அவருடைய மகன் ஆதிசங்கர் (வயது 27). இவர் பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் எந்திரங்கள் பிரிவில் உதவியாளராக வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு இவர் கார் உதிரிபாகங்களை கல்லில் சாணை பிடித்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த கல் உடைந்து ஆதிசங்கர் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஆதிசங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த நிலையில் இறந்த ஆதிசங்கரின் உறவினர்கள் 100-க் கும் மேற்பட்டோர் நேற்று மதியம் ஒரு மணி அளவில் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரி முன்பு உள்ள ரவுண்டானாவில் ஒன்று கூடினார்கள். பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்கள். இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.தகவல் கிடைத்ததும் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். சாலை மறியலில் ஈடுபட்ட ஆதிசங்கரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், இறந்த ஆதிசங்கரின் குடும்பத்துக்கு தொழிற்சாலை நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று முறையிட்டனர்.
அதற்கு போலீசார், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

0 comments: