Wednesday, October 08, 2014

On Wednesday, October 08, 2014 by farook press in ,    
ஈரோடு எஸ்.எஸ்.பி. நகர் பகுதியில் காலி நிலத்தில் திடீரென்று நீரூற்று தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இடி விழுந்ததால் இந்த நீரூற்று தோன்றியதா? என்று அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.ஈரோடு மாநகராட்சி 14-வது வார்டு பகுதிக்கு உட்பட்டது எஸ்.எஸ்.பி. நகர். இங்கு ராசாம்பாளையம் ரோட்டில் ஒரு ஓடைப்பள்ளம் உள்ளது. இந்த பகுதியையொட்டி ஸ்டாலின் வீதி என்ற குடியிருப்பு பகுதி இருக்கிறது. வீடுகளுக்கு இடையே உள்ள காலி நிலத்தில் முள்செடிகள் வளர்ந்து காடுபோல் கிடக்கிறது.நேற்று முன்தினம் இரவு ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதைத்தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு அந்த பகுதியை சேர்ந்த ஜோதி என்ற பெண் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது அவரது வீட்டின் எதிரே உள்ள காலி நிலத்தில் கணுக்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது. ஆங்காங்கே தண்ணீர் குமிழ்விட்டு ஊற்றெடுத்துக்கொண்டிருந்தது. பொங்கி வழியும் தண்ணீர் அருகில் உள்ள ஓடை வழியாக வெளியேறிக் கொண்டிருந்தாலும் காலி இடத்தில் தேங்கி இருந்த தண்ணீர் கொஞ்சமும் குறையாமல் பெருகிக்கொண்டே இருந்தது.இதுபற்றி அவர் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார். இந்த தகவல் பரவியதால் அந்த பகுதியை சேர்ந்த பலரும் அங்கு வந்து பார்த்தனர். ஒரு இடத்தில் மட்டும் இல்லாமல் அங்கு 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குமிழ் குமிழாக நீரூற்று தோன்றி இருந்தது.இடி விழுந்ததால் தான் இப்படி நீரூற்று ஏற்பட்டு இருக்கிறது என்ற தகவல் பரவியது. இதனால் பலரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இடி விழுந்ததால்தான் இந்த திடீர் நீரூற்று ஏற்பட்டதாக அந்த பகுதி மக்கள் கூறினார்கள். ஆனால் குடியிருப்பு பகுதியில் இடிவிழுந்ததா? இது தாழ்வான பகுதி என்பதால் உயர்ந்த பகுதியில் உள்ள வயல்வெளி தண்ணீர் ஊற்றெடுத்து உள்ளதா? என்பது பற்றி ஈரோடு தாசில்தார் அன்னபூரணி, துணை தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் பார்வையிட்டு சோதனை செய்து வருகிறார்கள்.

0 comments: