Saturday, November 01, 2014

On Saturday, November 01, 2014 by farook press in ,    
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் பி.என்.ரோட்டில் பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் திருப்பூர் கல்லூரி சாலை கண்ணகி நகரை சேர்ந்த கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் செல்வராஜ்(வயது 55) என்பவர் கடந்த மாதம் 24–ந் தேதி ரூ.10 கோடிக்கான காசோலையை வசூலுக்கு செலுத்தினார். அந்த காசோலை, மேற்குவங்காளத்தில் உள்ள மத்திய நிலக்கரி சுரங்க தொழிலாளர் சேமநலநிதி அமைப்பின் மண்டல கமிஷனர் வழங்கியதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
வழக்கம்போல் வங்கி அதிகாரிகள் அந்த காசோலையை மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள தங்களது வங்கி கிளைக்கு வசூலுக்காக அனுப்பினார்கள். அப்போது, செல்வராஜ் கொடுத்த ரூ.10 கோடிக்கான காசோலையில் குறிப்பிடப்பட்டு இருந்த எண்ணுடைய காசோலை கடந்த ஜூலை மாதம் 1–ந் தேதி மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள வங்கியிலேயே ரூ.13 லட்சத்து 32 ஆயிரத்து 452–க்கு வசூலுக்கு செலுத்தப்பட்டு பணம் பெறப்பட்டது தெரியவந்தது. இதனால் செல்வராஜ் கொடுத்த காசோலை போலியானது என்றும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து திருப்பூர் பி.என்.ரோடு பாரத ஸ்டேட் வங்கி கிளையின் முதன்மை மேலாளர் மோகன்குமார், அந்த காசோலைக்கு உரிய பணத்தை கொடுக்காமல் திருப்பூர் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் தலைமையிலான போலீசார் கட்டுமான நிறுவன உரிமையாளர் செல்வராஜை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் போலி காசோலை தயாரிக்க, திருப்பூரை சேர்ந்த அன்பு(48), பிரதீப்குமார்(34), செந்தில்குமார்(41), கருப்பையா(46) ஆகியோர் உள்பட மேலும் சிலர் செல்வராஜுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜ், அன்பு, பிரதீப்குமார், செந்தில்குமார், கருப்பையா ஆகிய 5 பேரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் சிலரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுபோல் வங்கியில் போலியான காசோலைகள் கொடுத்து ஏமாற்றும் நபர்கள் அடையாளம் காண்பதில் வங்கி அதிகாரிகள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், காசோலைகளின் மீது பணம் கொடுப்பதற்கு முன் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி மேற்கொள்ள வேண்டும் என்றும் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சேஷசாய் அறிவுறுத்தி உள்ளார்.

0 comments: