Saturday, November 01, 2014

On Saturday, November 01, 2014 by farook press in ,    
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது, ரூ.100, ரூ.500 கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சு எந்திரம் மூலம் அச்சடிக்கும் பணியில் சிலர் ஈடு பட்டுக்கொண்டு இருந்தனர்.
உடனே போலீசார் அங்கிருந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இது தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் ஜபருல்லா, ராஜசேகரன், ஷாஜி, முத்துசாமி, சுடலை, பேராச்சி, கருப்பையா, தாமோதரன், சீதாலட்சுமி, செந்தில்குமார் ஆகிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஜபருல்லா தவிர மற்ற 9 பேரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான ஜபருல்லா தலைமறைவாகி விட்டார். இந்த சம்பவம் 1998–ம் ஆண்டு நடந்தது.
மேலும் அந்த வீட்டில் இருந்து கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்திய அச்சு எந்திரங்கள், வெட்டு எந்திரங்கள், ‘பிலீம் ரோல்’ போன்றவற்றையும், ரூ.50 லட்சத்து 64 ஆயிரத்து 200 மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு பின்னர் கோவை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது.
சீதாலட்சுமி தவிர மற்ற 8 பேரும் ஜாமீனில் வெளியே வந்து விட்டனர். இந்த வழக்கு திருப்பூர் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதேவி முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில் அரசு வக்கீல் கே.என்.சுப்பிரமணியம் ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருக்கும் போதே கருப்பையா இறந்து விட்டார்.

இதில் இறுதி கட்ட விசாரணை முடிந்து நேற்று நீதிபதி ஸ்ரீதேவி தீர்ப்பு கூறினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் ஷாஜி, முத்துசாமி, சுடலை, தாமோதரன், செந்தில்குமார் ஆகிய 5 பேருக்கு தலா 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், சீதாலட்சுமி தொடர்ந்து சிறையில் இருந்து வருவதால் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். ராஜசேகரன், பேராச்சி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். ஜபருல்லா தொடர்ந்து இந்த வழக்கில் தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: