Sunday, November 16, 2014

On Sunday, November 16, 2014 by Unknown in ,    
கரூர் மாவட்ட கூட்டுறவு துறை மூலம் 61–வது கூட்டுறவு வார விழா - போக்குவரத்து துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்........
                              கரூர் மாவட்ட கூட்டுறவு துறை மூலம் 61–வது கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டது. கரூரில் நடந்த இந்த விழாவிற்கு கலெக்டர் ஜெயந்தி தலைமை தாங்கினார். திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு வரவேற்றுப் பேசினார். கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சந்தானம் விளக்கவுரையாற்றினார்.
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். சிறப்பு விருந்தினராக போக்குவரத்து துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களை தீட்டி, தமிழக மக்களின் முன்னேற்றம் தான் வாழ்க்கையின் லட்சியம் என்று ஜெயலலிதா அள்ளும், பகலும் அயராது உழைத்து வருகிறார். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் உள்ள அனைத்து துறைகளிலும், தமிழகம் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று நினைத்து, தொலை நோக்கு திட்டம் 2023 என்ற சீரிய திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி அதற்கான நிதியையும் வழங்கி உள்ளார்.
கூட்டுறவு சங்கத்திற்கு நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்படி தற்போது கூட்டுறவு சங்கம் சிறப்பாக மக்களுக்கு சேவை செய்யும் இயக்கமாக இயங்கி வருகிறது.
அதன்படி ஜெயலலிதா வழங்கிய திட்டங்கள் மூலம் கூட்டுறவு சங்கம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.
இதே போன்று விவசாயிகளின் வாழ்க்கை முன்னேற்றம் அடைய கடந்த 2011–12–ம் ஆண்டு விவசாயத்திற்காக ரூ.3 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் மிஞ்சி ரூ.3 ஆயிரத்து 280 கோடி ரூபாயை விவசாயிகளுக்கு ஜெயலலிதா வழங்கினார்.
இதே போன்று 2012–13–ம் ஆண்டு ரூ.4 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கூடுதலாக 69 ஒதுக்கி, ரூ.4069 கோடி வழங்கப்பட்டு உள்ளது. இதே போன்று 2013–14–ம் ஆண்டு ரூ.4,500 இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.4,716 கோடி விவசாய மக்களுக்கு பயிர் கடன் வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் கடந்த நிதி ஆண்டில் உணவு மானியமாக ரூ.5 ஆயிரத்து 300 கோடி வழங்கி உணவுக்கு உத்திரவாதம் கொடுத்தவர் ஜெயலலிதா.
இதே போன்று கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு கடந்த 2011–12–ம் ஆண்டு ரூ.92 கோடியே 90 லட்சம் பயிர் கடன் வழங்கப்பட்டு உள்ளது. அதே போன்று 2012–13–ம் ஆண்டில் ரூ.112 கோடியே 58 லட்சமும், 2013–14–ம் ஆண்டில் ரூ.132 கோடியே 12 லட்சமும் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை 10 ஆயிரத்து 933 விவசாயிகளுக்கு ரூ.92 கோடியே 17 லட்சம் பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது.
எனவே ஜெயலலிதா வழங்கிய திட்டம் மூலம் தமிழக மக்கள் முன்னேற்ற அடைந்து வருகின்றனர். எனவே வரும் காலத்தில் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
தொடர்ந்து பல்வேறு விவசாயிகளுக்கு ரூ.3 கோடியே 97 லட்சத்து 75 ஆயிரத்து 550 ரூபாயில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.                  

0 comments: