Saturday, November 01, 2014

On Saturday, November 01, 2014 by Unknown in ,    

ரத்தக் குழாய் வெடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு, நூதன ரத்தக் குழாய் மாற்று அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவர் சாதனை நிகழ்த்தியுள்ளார்.
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் ஆர். ரகுநாதன். இவர், 2 ஆண்டுகளுக்கு முன் ரயில் விபத்தில் சிக்கி, முழங்காலுக்கு கீழ் தனது 2 கால்களையும் இழந்தவர். இந்நிலையில், இவருக்கு, அடிக்கடி வயிற்று வலி வந்துள்ளது. அங்குள்ள தனியார் மருத்துமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 14 நாள்களுக்கு முன் கடும் வயிற்று வலி ஏற்பட்டதில் மயங்கியுள்ளார்.
அவரை, உறவினர்கள் அந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர், ரத்தக் குழாய் வெடித்துள்ளது என்றும், அதற்கு தங்கள் மருத்துமனையில் அறுவைச் சிகிச்சை செய்ய இயலாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சில மருத்துவமனைகளை அணுகியுள்ளனர். ஆனால், அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய மறுத்துள்ளனர். 12 நாள்களுக்கு முன், அவரை உறவினர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். முதுநிலை மருத்துவர் சரவணன் அவரை பரிசோதித்தபோது, ரத்த அழுத்தம் 80-க்கு கீழ் இருந்துள்ளது.
உடனே அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவர் ஏற்பாடு செய்துள்ளார். மயக்கவியல் துறைத் தலைவர் கணேஷ்பாபு ஆலோசனையில், மயக்கவியல் மருத்துவர் கணேசபாண்டியன், மருத்துவர் சரவணனுக்கு உதவியாக இருந்தார்.
ரகுநாதனுக்கு மருத்துவர் சரவணன் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். அப்போது, அவரது வயிற்றுப் பகுதியில் ரத்தக் குழாய் வெடித்து, 3 லிட்டர் அளவுக்கு ரத்தம் சிதறியிருந்ததாம். அந்த ரத்தத்தை அப்புறப்படுத்திவிட்டு, புதிதாக 8 யூனிட் ரத்தத்தை அவருக்கு செலுத்தியுள்ளார். வெடிப்பு ஏற்பட்டிருந்த ரத்தக் குழாயில் 20 செ.மீ. அளவுக்கு வெட்டி எடுத்து அப்புறப்படுத்தப்பட்டது. அந்தக் குழாய்க்கு பதிலாக, செயற்கை ரத்தக் குழாய் புதிதாக பொருத்தப்பட்டு, அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 6 மணி நேரம் இந்த அறுவைச் சிகிச்சையை மருத்துவர் சரவணன் மேற்கொண்டு, வெற்றிகரமாக முடித்துள்ளார்.
அறுவைச் சிகிச்சைக்கு பின்னர், ரகுநாதனுக்கு மேலும் 3 லிட்டர் ரத்தம் செலுத்தப்பட்டது. 2 நாள்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், முற்றிலுமாகக் குணமாகி வீடு திரும்புவதற்கு தயாராகியுள்ளார்.
இன்னும், ஓரிரு நாள்களில் அவர் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.  அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள மருத்துவர் சரவணனுக்கு, ரகுநாதனின் மனைவி மற்றும் உறவினர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

0 comments: