Tuesday, December 30, 2014

On Tuesday, December 30, 2014 by farook press in ,    
காங்கயம் அருகேயுள்ள நிழலி கிராமம் வழியாக செல்லும் ஓடையில் ஆங்கிலேயர் காலத்தில் திட்டமிடப்பட்ட இடத்தில் தடுப்பணை கட்டப்படவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து அந்த இடத்தை மாவட்ட கலெக்டர் நேற்று பார்வையிட்டார்.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்துள்ள நிழலி கிராமம் மிகவும் வறட்சியான பகுதியாகும். இந்த கிராமத்தின் நிலை கண்டு அப்பகுதியில் ஓடும் வட்டமலைக்கரை ஓடையில் ஆங்கிலேயர் காலத்தில் தடுப்பணை கட்ட திட்டமிடப்பட்டது.
செஞ்சேரிமலைப்பகுதியில் தொடங்கும் வட்டமலைக்கரை ஓடை புத்தரச்சல், இடையபட்டி, கொக்கம்பாளையம், நாட்டான்வலசு, நிழலி, வட்டமலை வழியாக வெள்ளகோவில் அருகில் உள்ள வட்டமலைக்கரை அணையில் சேருகிறது.
இதில் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. இன்னும் இடையபட்டி, நிழலி உள்ளிட்ட இடங்களில் தடுப்பணைகள் வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நிழலி அடுத்துள்ள எல்லப்பாளையம்புதூர் பகுதியில் புதிய தடுப்பணை கட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் உத்தேசித்துள்ளதாக தெரிகிறது. இதற்கு நிழலி பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நிழலி பகுதியில் கட்டவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி நிழலி பகுதி பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, நிழலி அருகில் தடுப்பணை கட்ட ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அதாவது 1946–ம் ஆண்டில் கற்கள் கொண்டு வந்து போடப்பட்டன. 1947–ல் சுதந்திரம் கிடைத்துவிட்டதால் ஆங்கிலேயர் சென்றபின்னர் அப்பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. அவர்கள் தடுப்பணை கட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் சுமார் 35 ஏக்கர் பரப்பில் நீர் தேங்கி நிற்கும் வகையில் உள்ளது.
தற்போது எல்லப்பாளையம்புதூர் அருகே தடுப்பணை கட்ட உத்தேசித்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே அப்பகுதியில் 3 குளங்கள் உள்ளன. மேலும் நீர் தேங்கும் பரப்பும் அங்கு குறைவாக உள்ளது. நிழலி அருகில் கட்டினால் நீர் தேங்கும் பரப்பு அதிகம் உள்ளதுடன் நிழலி, கவுண்டம்பாளையம், குருக்கபாளையம், கெராக்காடு, ஆண்டிபுதூர், சாலப்பதி உள்ளிட்ட 10–க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய கிணறுகள் மற்றும் போர்வெல்கள் பயனடையும்.
எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் நிழலி பகுதியில் ஆங்கிலேயர் திட்டமிட்ட இடத்திலோ அல்லது அதற்கு பக்கத்திலோ தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றிய செய்தி ‘தினத்தந்தி’யில் வெளியானது.
இந்தநிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் நேற்று குறிப்பிட்ட அந்த இடத்தை பார்வையிட்டார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து அணை கட்டினால் இந்த பகுதியில் ஓரளவு குடிநீர் பிரச்சினை தீரும். மேலும் விவசாய கிணறுகளில் தண்ணீர் வர வாய்ப்புள்ளது என்று கலெக்டரிடம் கூறினார்கள்.
அதற்கு கலெக்டர் தேவையான நடவடிக்கை ஆராய்ந்து எடுக்கப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தார். கலெக்டருடன் தாராபுரம் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, தாசில்தார் ஆறுமுகம், குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

0 comments: