Monday, December 29, 2014

On Monday, December 29, 2014 by Unknown in ,    
அதிகரித்துவரும் ஓட்கா விலையைக் கட்டுப்படுத்தும்படி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கெனவே சிக்கலாகிவரும் ரஷ்ய பொருளாதார பிரச்சனைகளை எதிர்கொண்டுவரும் புடின், ஓட்காவின் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்வதானது, பாதுகாப்பற்ற கள்ளச்சாராயத்தைக் குடிக்கும் போக்கை ஊக்குவிக்கக்கூடும் என்று கவலை வெளியிட்டிருக்கிறார்.
 
ரஷ்யா மீதான மேற்குலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள் மற்றும் சர்வதேச அளவில் வீழ்ச்சியடைந்துவரும் பெட்ரோல் எண்ணெய் விலைகள் இரண்டுமாக சேர்ந்து ரஷ்ய நாணயமான ரூபிளின் மதிப்பை சமீப காலத்தில் பெருமளவு வீழ்ச்சியடையச் செய்திருக்கிறது.
 
அடுத்த ஆண்டு ரஷ்ய பொருளாதாரம் மந்தநிலையை அடையும் என்று அந்நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் ஏற்கெனவே எச்சரித்திருக்கிறார்.
 
ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்திவரும் புடின், ஓட்கா விலைக்கட்டுப்பாடு குறித்த தனது கருத்துக்களை அதற்குத் தொடர்புடைய அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் கவனத்தில் கொள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். சட்டவிரோத சாராய வியாபாரத்தை தடுப்பது தொடர்பில் அரசு கவனம் செலுத்தவேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
 
ரஷ்ய ஆண்களில் சுமார் 25 சதவீதமானவர்கள் தமது 50 வயதை எட்டுவதற்குள் இறந்துவிடுவதாக ரஷ்யாவின் முன்னணி பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்திருப்பதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. இத்தகைய வயது குறைந்த மரணங்களுக்கான காரணிகளில் ஒன்றாக சாராயமும் இருப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்திருந்தது.
 
கடந்த ஓராண்டில் மட்டும் அரை லிட்டர் வோட்காவுக்கு ரஷ்ய அரசு பரிந்துரை செய்யும் குறைந்தபட்ச விலையானது 30 சதவீதம் அதிகரித்திருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் அரை லிட்டர் ஓட்காவின் அரசு பரிந்துரை விலை 220 ரஷ்ய ரூபிள்கள் ($4.10).
 
ரஷ்யாவில் ஓட்காவின் விலை மட்டுமல்ல, வருடாந்த பணவீக்கமும் தொடர்ந்து அதிகரித்தபடியே இருக்கிறது. தற்போது ரஷ்யாவின் பணவீக்கம் 9.4 % என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments: