Wednesday, December 31, 2014

On Wednesday, December 31, 2014 by Unknown in ,    
ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் அப்படியொன்றும் பெரிய புத்திசாலி கிடையாது என்றும் கிரைமியாவை யுக்ரேனிடமிருந்து கைப்பற்றியது அவர் செய்த பெரிய தவறு என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

புடின் பெரிய புத்திசாலியல்ல - ஒபாமா

என் பி ஆர் என்ற வானோலி சேவைக்கு பேட்டியளித்த ஒபாமா, புடின் பெரிய அறிவாளி என்றிருந்த மதிப்பீட்டை ரஷ்யா தற்போது சந்தித்துக்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகள் பொய்யாக்கியுள்ளன என்று ஒபாமா விமர்சித்துள்ளார்.
 
ரஷ்யா மீதான சர்வதேச பொருளாதாரத் தடைகள் காரணமாகவும், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டிருக்கும் மோசமான வீழ்ச்சியினாலும் ரஷ்யப் பொருளாதாரம் கடும் தாக்கத்துக்குள்ளாவதாக ஒபாமா தெரிவித்துள்ளார்.
 
“மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு முன்பு வாஷிங்டன்னில் இருந்த பலர் கூட, ரஷ்ய அதிபர் தன்னுடைய எதிர்ப்பாளர்களை இலகுவாக சமாளித்துச் செல்கிறார் என்றும் மற்றவர்கள் மிரட்டி ஒடுக்கி அவர் ரஷ்யாவை விரிவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளார் என்றும் கருதினார்கள். ஆனால் இப்போது ரஷ்யாவுக்கு வெளியே இருப்பவர்கள் புடின் செய்தது புத்திசாலித்தனமான காரியமில்லை என்று கருதுகிறார்கள்.” என்றார் ஒபாமா.
 
வெறும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை மட்டுமே ரஷ்யா நம்பியுள்ளதாகவும், ஆனால் அமெரிக்கப் பொருளாதாரமோ, ஐ பேடில் இருந்து திரைப்படங்கள் வரை பலவிதமான பொருட்களை தயாரிப்பதில் வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சர்ச்சைக்குரிய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்குப் பிறகு யுக்ரேனிடமிருந்த கிரைமியா பிரதேசத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டதாக ரஷ்யா அறிவித்தது. ரஷ்ய ஆதரவு நிலைப்பாடு கொண்ட யுக்ரேனிய அதிபர் விக்டர் யானகோவிச் பதவியிறக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு கிரைமியா மீதான நடவடிக்கையை ரஷ்யா எடுத்தது.
 
இதையடுத்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. டாலருக்கு நிகரான ரஷ்யாவின ரூபிள் நாணயத்தின் மதிப்பு பாதியாகக் குறைந்துவிட்டது. ருபிளை உயர்த்த அந்நாட்டு மத்திய வங்கி வட்டி வீதத்தை மிக அதிக அளவுக்கு 17 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இருந்தும் ரஷ்யாவின் பொருளாதரம் சுருக்க நிலைக்குப் போய்விட்டது.
 
ரஷ்யாவின் பொருளாதாரத்தை மீண்டும் சீர்படுத்த சில ஆண்டுகள் பிடிக்கும் என்று அதிபர் புடின் தெரிவித்துள்ளார். செலவினங்களைக் கட்டுப்படுத்தும் சிக்கன நடவடிக்கைகளை ரஷ்யர்கள் எடுத்து வருகின்றனர்.

0 comments: