Monday, December 29, 2014

On Monday, December 29, 2014 by Unknown in ,    




திருப்பூர் சாமுண்டிபுரத்திலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, அந்த கடையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனர்.
திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை (எண் -1930) அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடையால் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் இடையூறுகள் ஏற்படுவதாகக் கூறி, டாஸ்மாக் கடையை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சாவித்திரி, 15வேலம்பாளையம் நகரச் செயலாளர் செல்வி, தலைவர் கிருஷ்ணவேனி உள்ளிட்ட 50 பெண்கள், வாலிபர் சங்கம் சார்பில் 15வேலம்பாளையம் நகரச் செயலாளர் நவபாலன், தலைவர் நவநீதன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளர் முருகேஷ், 15வேலம்பாளையம் நகரச் செயலாளர் கே.ரங்கராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாநகர காவல் துணை
ஆணையர் திருநாவுக்கரசு, சமரசப் பேச்சு நடத்தினார். டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சித்ரா, இன்னும் 20 நாள்களில் இந்த டாஸ்மாக் கடையை அப்பகுதியில் இருந்து அகற்றுவதாக உறுதி அளித்தார். அதையடுத்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.

0 comments: