Tuesday, December 30, 2014

On Tuesday, December 30, 2014 by farook press in ,    
திருப்பூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் ராமலிங்க அடிகளாரின் 192–வது ஆண்டு விழா மற்றும் சன்மார்க்க சங்கத்தின் 77–வது ஆண்டு விழா திருப்பூரில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு சங்கத்தலைவர் சித்ரா ராமசாமி தலைமை தாங்கினார்.
ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தார். பொருளாளர் ஜீவானந்தம் ஆண்டறிக்கை வாசித்தார். வடலூர் கருணை இல்ல நிர்வாகத் தலைவர் சுப்பிரமணியம், பேராசிரியர் ஆனந்தகுமார் ஆகியோர் பேசினார்கள்.
அதைத்தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி அளவில் மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் பள்ளி அளவில் குளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் அமர்நாத், முத்தணம்பாளையம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி மாணவி பூரணி, வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சவுந்தரியா ஆகியோர் முதல் 3 இடங்களை பெற்றனர்.
அதே போல கல்லூரி அளவில் நடைபெற்ற போட்டியில் கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர் சந்தோஷ்குமார், திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரி மாணவி வித்யா, திருப்பூர் ஏஞ்சல் பொறியியல் கல்லூரி மாணவர் ஆதித்யா விக்னேஷ் ஆகியோர் முதல் 3 இடங்களை பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு முறையே ரூ.2,000, ரூ.1,500, ரூ.1,000 ரொக்கப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முடிவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், யோகா, வாத்திய கருவிகள் இசைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட திருக்குறள், கம்பராமாயணம், சித்தர் பாடல்கள் ஆகியவை பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில் பேராசிரியர் புருசோத்தமன், டிட்டோனி முத்துசாமி, பசுமை ராமசாமி, கே.எஸ்.சி. பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தங்கவேல் உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
முடிவில் கந்தசாமி நன்றி கூறினார்.

0 comments: