Monday, January 05, 2015

On Monday, January 05, 2015 by Unknown in ,    
விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தது தொடர்பாக அந்த மருத்துவமனை நிர்வாகி, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆகிய இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பல்லடம் அருகே கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் பெட்ரோல் பங்க் தொழிலாளி அஜீத்குமார்(17). அவர், புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, பொங்கலூர் சாலை, கள்ளிமேடு என்ற இடத்தில் நிலைதடுமாறிக் கீழே விழுந்து காயமடைந்தார். அவர், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர், அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
ஆனால், வழியிலேயே அவரது உடல் பலகீனமடைந்திருப்பதாகக் கூறி, ஆம்புலன்ஸ் ஊழியர்கள், திருப்பூர் பாண்டியன் நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். அங்கு, அஜித்குமார் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
மருத்துவமனை நிர்வாகம், உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் அஜித்குமாரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும், சாவில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி, அவரது உறவினர்கள் மருத்துமனையை முற்றுகையிட்டனர். அதன்பின், சனிக்கிழமை அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில், அஜித்குமாரின் தாய் சித்ரா கொடுத்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீஸார், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையின் நிர்வாகி மலர்மன்னன், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பன்னீர் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

0 comments: