Tuesday, January 20, 2015

On Tuesday, January 20, 2015 by Unknown in ,    

சாமுண்டிபுரத்தில் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக் கடையை அப்புறப்படுத்தக் கோரி அந்த கடை முன் பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை (எண் 1930) உள்ளது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த டாஸ்மாக் மதுக் கடையால் பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாகக் கூறி, அந்த மதுக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டன.
இதையடுத்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சித்திரா, ஜனவரி 17-ஆம் தேதிக்குள் கடையை அப்புறப்படுத்துவதாக தெரிவித்திருந்தார். ஆனாலும், அந்த கடை அப்புறப்படுத்தப்படவில்லை. திங்கள்கிழமை வழக்கம்போல் அந்த கடை திறக்கப்பட்டது.
உடனடியாக, அப்பகுதி பொதுமக்களுடன் அனைதிந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் மதுக்கடை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த கடை மூடப்பட்டு, போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதையடுத்து, அனைதிந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலர் சாவித்திரி, தலைவர் அங்குலட்சுமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நகர செயலர் நவபாலன், தலைவர் நவநீதன் உள்ளிட்டோர் மாநகர காவல் துணை ஆணையர் திருநாவுக்கரிடமும், ஆட்சியர் அலுவலகத்திலும் மனுகொடுத்தனர்.
மதுக்கடையை இடம் மாற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது

0 comments: