Tuesday, January 20, 2015

On Tuesday, January 20, 2015 by Unknown in ,    



திருப்பூர் அரசு மருத்துவமனையை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இணையான தரத்தில் உயர்த்திட ரூ.5.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளைப் சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தமிழக அரசு ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததையடுத்து, பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதவிர, இம்மருத்துவமனையை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இணையானதாக தரம் உயர்த்தி அரசாணை வெளயிடப்பட்டு, ரூ.5.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதியின் மூலமாக பல்வேறு வசதிகள் ஏற்படுத்திட பொதுப்பணித் துறை, மருத்துவத் துறை இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.
தமிழகம் முழுவதும் டெங்கு, வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான பணிகளின் முன்னேற்றம், பொதுமக்களிடம் இதுதொடர்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள விழிப்புணர்வு குறித்தும் திருப்பூரில் ஆய்வு செய்யப்பட்டது. டெங்கு, வைரஸ் காய்ச்சல் ஏற்படுத்தக்கூடிய ஏடீஸ் கொசுக்கள் நல்ல தண்ணீரில் உற்பத்தியாகக் கூடியது. எனவே, வீட்டுகளில் தண்ணீர் தேங்க விடாமல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் தான். இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ஒரு நபர் மட்டுமே தற்போது திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த காய்ச்சல் குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை.
தொடர் சிகிச்சைகள் மூலம் டெங்கு காய்ச்சலை குணப்படுத்த முடியும் என்றார் அவர்.
முன்னதாக, அவசரச் சிகிச்சைப் பிரிவில் தொடங்கப்பட்டுள்ள டெங்கு காய்ச்சல் சிகிச்சை வார்டில் நோயாளிகளை நேரில் சந்தித்து ஜெ.ராதாகிருஷ்ணன் ஆறுதல் கூறினார். மேலும், நோளிகளுக்கு காய்ச்சல் குறைந்தாலும், கூடுதலாக இரு நாள்கள் கவனித்த பிறகே, அவர்களை இங்கிருந்து அனுப்ப வேண்டும் எனவும் மருத்துவர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
மருத்துவமனை இணை இயக்குநர் தனபால், கண்காணிப்பாளர் கேசவன், மாவட்ட சுகாதார துணை இயக்குநர் ரகுபதி, சார்ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மக்கள் குற்றச்சாட்டு
திருப்பூர் அரசு மருத்துவமனையில் பொது வார்டு, சமையல் கூடம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை ஆய்வு செய்த சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், நோயாளிகளுக்கு சரிவிகித உணவுகளை சரியான நேரத்தில் அளிக்க வேண்டும் என்றும், வார்டுகளை சுகாதாரமான முறையில் பராமரிக்கவும் அறிவுறுத்தினார்.
குழந்தைகள் வார்டுக்குச் சென்ற அவர், சிறிய அறையில் அந்த வார்டு அமைக்கப்பட்டுள்ளதைக் கண்டு, அந்த வார்டை வேறு இடத்துக்கு மாற்றியமைக்குமாறு உத்தரவிட்டார்.
அங்கிருந்து வெளியில் வந்த அவரிடம் நோயாளிகளின் பெற்றோர், உறவினர்கள் பல்வேறு குறைகளை தெரிவித்தனர். இந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சை குறைபாடு நிலவுவதாகவும், ரத்த மாதிரிகள் ஆய்வு செய்து வர காலதாமதம் ஏற்படுவதாகவும், பல்வேறு வசதிகள் இருந்தபோதும் தீவிர சிகிச்சை என்றால் நோயாளிகளை கோவைக்கு அனுப்புவதாகவும் முறையிட்டனர்.இதுதொடர்பாக, மருத்துவமனை இணை இயக்குநரிடம் விசாரித்த ராதாகிருஷ்ணன், இப்பிரச்னைகள் தொடர்ந்து ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என புகார் தெரிவித்தவர்களிடம் தெரிவித்தார்

0 comments: