Thursday, January 01, 2015

On Thursday, January 01, 2015 by Unknown in ,    
மண் சாலைகளைத் தார்ச்சாலைகளாக மாற்றியமைக்க வேண்டும் என அவிநாசி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
அவிநாசி ஒன்றியக் குழுக் கூட்டம், ஒன்றியக் குழுத் தலைவர் பத்மநந்தினிஜெகதீசன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. ஆணையர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்((ஊராட்சி), ராஜகோபால், துணைத் தலைவர் சிவகாமி சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கவுன்சிலர்கள் பேசியது:
கணேசன் (கொமதேக): முருகம்பாளையம் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து குழாய்கள் அமைத்து, உப்பிலிபாளையத்திற்கு குடிநீர் விநியோகிக்க வேண்டும். ராமநாதபுரம் ஊராட்சி தொட்டக்களாம்புதூரில் இருந்து செங்காளிபாளையம் வரை உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்றியமைக்க வேண்டும்.
விஜயராகவன் (சிபிஐ): கருவலூர் நைனாம்பாளையம் ஆழ்குழாய் கிணற்றுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பில், 10 ஹெச்.பி. மின் மோட்டார் பொருத்த நிதி ஒதுக்கீடு செய்து, ஓராண்டு ஆகியும் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எலச்சிபாளையம் முதல் தண்ணீர்பந்தல் வரை உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்றியமைக்க வேண்டும்.
கண்ணம்மாள் ராமசாமி(அதிமுக): பிச்சாண்டம்பாளையம் புதூர் ஏ.டி.காலனி முதல் பெரிய ஓலப்பாளையம் வழியாக சின்ன ஓலப்பாளையத்திற்கு தார்ச் சாலை அமைக்க வேண்டும்.
சக்திவேல் (சுயே): நீண்ட காலமாக குடிநீருக்காகப் போராடி வரும் லூர்துபுரம் மக்களுக்கு அவிநாசி, அன்னூர், சூலூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில், சாத்தியப்பட்ட வகையில் குடிநீர் வழங்க வேண்டும்.
ராஜகோபால் (வட்டார வளர்ச்சி அலுவலர்): சட்டப்பேரவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலமாக லூர்துபுரத்தில் தரைமட்ட நீர்தேக்கத் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுத்தால், கூட்டுக் குடிநீர் திட்டத்தில் அப்பகுதிக்கு குடிநீர் கிடைக்க வழிவகை செய்துதரப்படும்.
செந்தில்குமார்(அதிமுக): தேவம்பாளையம் முதல் குமாரபாளையம் வரை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பனை மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர் (பத்மநந்தினி ஜெகதீசன்): மண் சாலைகளை தார்ச் சாலையாக மாற்றியமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வளர்ச்சிப் பணிகளுக்கான டெண்டர் வரும் 10 நாள்களுக்கு விடப்பட்டு, வேலைகள் துவக்கப்படும் என்றார்.

0 comments: