Thursday, January 08, 2015

On Thursday, January 08, 2015 by farook press in ,    
ஆண்டுதோறும் ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் நடவு செய்யப்பட்டு தை மாதம் அறுவடை செய்யப்படும் புகையிலை பயிர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை காங்கயம் பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தண்ணீர் பிரச்சினை, பராமரிப்பு, விலையின்மை போன்ற காரணங்களால் புகையிலை பயிரிடுவதை விவசாயிகள் படிப்படியாக குறைத்துக் கொண்டு மாற்றுப் பயிர்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையிலும் காங்கயம் அடுத்துள்ள புதுப்பாளையம், காங்கயம்பாளையம், ஊதியூர், செங்கோடம்பாளையம், மரவபாளையம், சித்தம்பாளையம், பகுதிகளில் சில நூறு ஏக்கர் பரப்பில் விவசாயிகள் புகையிலை சாகுபடி செய்துள்ளனர்.
இதுபற்றி புகையிலை விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:–
ஏக்கருக்கு 6 ஆயிரம் நாற்றுகள் வரை நடப்படும் புகையிலை 110 நாள் பயிராகும். உழவு, களையெடுத்தல், சிம்பு எனப்படும் கிளைகள் ஒடித்தல், உரச்செலவுகள் என ஏக்கருக்கு சுமார் ரூ.20 ஆயிரம் வரை செலவாகும். செடியின் விலை சுமாராக ரூ.8–க்கு விற்றாலும் ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் வருமானம் கிடைக்கும். செலவு போக நிகர லாபமாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் கிடைக்கும் என்றனர்.
இங்கு விளையும் புகையிலை கொடுவாயைச் சேர்ந்த உள்ளூர் வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு கேரளா மாநிலம் கொல்லம், கோட்டயம், செங்கனச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. அதிகமாக புகையிலை விளைந்த காலங்களில் உள்ளூரிலேயே அவற்றை பதப்படுத்தி வந்தனர். இதற்காக கொடுவாய், வெள்ளியம்பாளையம், குண்டடம் பகுதிகளில் ஏராளமான புகையிலை குடோன்கள் இருந்தன. தற்போது புகையிலை சாகுபடி குறைந்த காரணத்தினால் அவைகள் கல்யாண மண்டபங்களாகவும், மாட்டுத் தொழுவங்களாகவும் மாறிவிட்டன.
இவ்வாறு விவசாயிகள் கூறுகின்றனர்.

0 comments: