Saturday, March 14, 2015

On Saturday, March 14, 2015 by Unknown in ,    
திருக்குறளால் உலகெங்கும் தமிழ் பரவியுள்ளது என, தமிழ் வளர்ச்சித் துறை செயலர் மூ. ராசாராம் பேசினார்.
மதுரையில் உலகத் தமிழ் சங்கம் சார்பில், உலகத் தமிழ் எழுத்தாளர்களுக்கிடையிலான பன்னாட்டுப் பரிமாற்றக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை, தொடக்கி வைத்து அவர் மேலும் பேசியது:
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் இலக்கியமான தொல்காப்பியத்தில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய உலகின் புவி அமைப்பு தொடர்பான குறிப்புகள் உள்ளன. உலகில் முதலில் தோன்றிய மொழி தமிழ் என்பதற்கு இதுபோன்ற பல சான்றுகள் உள்ளன. அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் தமிழ்தான் உலகின் மூத்த மொழி என்பதை ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளார்.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் எக்காலத்துக்கும் பொருந்தும் ஒழுக்க நெறிகளை வகுத்து அளித்துள்ளார். திருக்குறளை லத்தீன், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்ட பிறகுதான், உலக அளவில் தமிழ் மொழி பரவியது.
கன்னியாகுமரிக்கு தெற்கே தமிழர்கள் வாழ்ந்த பெரும் நிலப்பரப்பு, கடலில் மூழ்கியதால், தமிழர்களின் நிலப்பரப்பு சுருங்கியது. இப்போதும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் தமிழர்கள் பழங்குடிகளாக வாழ்கின்றனர் என்பதற்கு சான்றுகள் உள்ளன என்றார்.
நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி இயக்கக இயக்குநர் கா.மு. சேகர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ. விசயராகவன், உலகத் தமிழ்ச் சங்க தனி அலுவலர் க. பசும்பொன், பேராசிரியர் சச்சிதானந்தம், பத்திரிகையாளர் மருது அழகுராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, சங்க இலக்கியத்தில் ஆய்வுகள், புலம்பெயர்ந்த இலக்கியம், தற்கால சிறுகதை இலக்கியங்கள் ஆகிய தலைப்புகளில் அமர்வுகள் நடைபெற்றன. முனைவர் இரா. இளஙகுமரன், பேராசிரியர்கள் இரா. மோகன், பா. மதிவாணன், மணா, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் சே. கணேஷ்ராம், முனைவர் தெ. வெற்றிச்செல்வன், முனைவர் பா. ஆனந்தகுமார், அரவிந்தன், சுரேஷ்குமார், இந்திரஜித் ஆகியோர் பேசினர்.
கருத்தரங்கில், தற்காலச் சிறுகதைகளின் உத்தி என்ற தலைப்பில் பத்திரிகையாளர் திருப்பூர் கிருஷ்ணன் பேசியது: கதாசிரியர்கள் கதை சொல்வது போன்று ஒரு உத்தி பெரும்பாலும் சிறுகதைகளில் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதில், புதிய உத்திகளை புகுத்திய பலர் உள்ளனர். சிறுகதை எழுத்தாளர்களின் முன்னோடியாகத் திகழும் வ.வே.சு. அய்யர் குளத்தங்கரை ஆலமரம் என்ற கதை எழுதினார். அதில் ஆலமரம் பேசுவது போன்ற அம்சம் இருந்தது.
விமலாஜித்த மாமல்லன் எழுதிய கதையில், நாற்காலி கடிதம் எழுதுவது போன்று கதை அமைப்பு இருந்தது. எழுத்தாளர் சுஜாதா இரு கடிதங்கள் என்ற கதையில் தாய் மகளுக்கு கடிதம் எழுதுவது போன்ற அமைப்பு இருந்தது.
தமிழ் சிறுகதைகளில் அதிக அளவிலான உத்திகளைக் கையாண்டவர் கோபிகிருஷ்ணா. எனவே, சிறுகதை எழுதும் உத்திகள் மேலும் வளரவேண்டும் என்றார்.
தமிழ்ச் சிறுகதைகள் நேற்று, இன்று, நாளை என்ற தலைப்பில் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேசியது: 1940 முதல் 1960 வரையில் எழுதப்பட்ட சிறுகதைகள் தான் இன்றளவும் வாடாமலர்களாக உள்ளன.
வாசிக்கும்போது தாக்கம் ஏற்படுத்துவதாக அவை இருந்தன. புதுமைப்பித்தன், அழகிரிசாமி, மவுனி, நா.பா, லெட்சுமி என ஒரு பெரிய பட்டியல் உள்ளது. இன்றைக்கு பந்தயக் குதிரை போல் ஒரு போட்டி, சிறுகதை எழுதுபவர்கள் மத்தியில் உள்ளது. முன்னிலை இதழ்களில் கதைகளை பிரசுரம் செய்வதற்குப் பெரிதும் போராட வேண்டியுள்ளது. இதனால், சிறுகதைகள் வாசிப்பு குறைந்துள்ளது. அதை அதிகரிக்கச் செய்யவேண்டும். இல்லையெனில், சிறுகதைகள் ஒரு கட்டத்தில் இல்லாமல் போய்விடும் என்றார்

0 comments: